சனி, 8 ஜனவரி, 2011

இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை - நூலகவியலாளர் என்.செல்வராஜா

இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில்“இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.

பாடப்புத்தகங்களையும், பாடஉசாத்துணை நூல்களையும் வெளியிட்டு வரும் சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடாக வெளிவந்துள்ள இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற நூலை பார்ப்போம்.
கிழக்குமாகாணத்தின் கல்முனை – சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகக் கொண்ட கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும், தென் மாகாணத்தில் காலி – கட்டுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஸீதா புன்னியாமீன் அவர்களும் இணைந்து எழுதியுள்ள இக்கவிதைத்தொகுப்பில் சுமார் 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரு கவிஞர்களும் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் வழியாக இலக்கிய உலகில் நன்கு பரிச்சியமானவர்கள். பல நூல்களைத் தத்தம்பெயரில்  வெளியிட்டவர்கள்.

உடத்தலவின்ன மடிகேயிலுள்ள சிந்தனை வட்டம்,  இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் 1வது பதிப்பினை ஏப்ரல் 2000இல் வெளியிட்டுள்ளது. 154 பக்கங்கள்,  மற்றும் சித்திரங்கள், கொண்ட இந்நூலின் விலை: ரூபா 100. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கவிதை நூலில் அவதானித்த ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால்,  இதில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் எவை கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் படைப்புக்கள் எவை மஸீதா புன்னியாமீன் அவர்களின் படைப்புக்கள் என்று வேறுபடுத்திக்கண்டறியமுடியாமல் உள்ளதாகும். மீண்டும் நூலின் தலைப்பினை வாசித்தேன். இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற பெயர் இதற்காகத்தான் தரப்பட்டுள்ளதோ என்று கருதுகின்றேன்.

இலங்கையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் விரல்விட்டெண்ணக் கூடியனவாகவே உள்ளன. இளம் வயதில் சில பெண் எழுத்தாளர்கள் வேகத்துடன் பத்திரிகைகளில் கவிதைகளைப் படைத்திருந்த போதிலும்ää காலப்போக்கில் அத்துறையைக் கைவிட்டவர்களாகவே பெரும்பாலான முஸ்லீம் பெண் எழுத்தாளர்கள் காணப்படுகின்றார்கள். 1980க்கு முன்னைய காலங்களோடு ஒப்பிடும் போது, 80களுக்குப் பின் இந்தப்போக்கில் பாரிய மாற்றம் காணப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. 80களுக்குப் பின்னர் வளர்ச்சிகண்ட பெண் எழுத்தாளர்களில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும்.  மஸீதா புன்னியாமீன் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை நூலில் இடம்பெற்றுள்ள 59 கவிதைகளும் புதுக்கவிதை சார்ந்தவை. பல கவிதைகள் கருத்தாழம் மிக்கவை. சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியவை. அரசியல்பொருளாதாரம், கல்வி, சமயம்,  காதல் எனப் பல பக்கங்களையும் தொட்டுச் செல்பவையாக அவை அமைகின்றன. இரு பெண் கவிஞர்களின் படைப்புக்களைக் கொண்ட நூல் என்றவகையில் இயல்பாகவே இங்கு பெண்கள் தொடர்பான விடயங்களைக் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் பிரச்சினைகளை இனங் காட்டுபவையாகவும்,  பெண்களின் விழிப்புணர்வைத் தூண்டுவனவாகவும் அவை அமைந்துள்ளன. அதையடுத்து நாட்டின் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட கவிதைகள் விளங்குகின்றன. இத்தகைய கவிதைகளில் சுமார் 10 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. நஷ்டஈடு,  பிறந்த மண், என் தேசமிது,  கூவி அழைக்கும் காகம்,  துளிர்விட்ட தேசம் போன்றவை இத்தகைய கவிதைகளில் சிலவாகும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவ்வொரு கவிதையும் பொருத்தமான ஓவியங்களுடன்; பக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலில் சிந்தனைவட்டம் கடந்துவந்த பாதச்சுவடுகளை மீண்டும் நினைவுகூரும்வகையில் அதன் ஸ்தாபகர் பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் எழுதிய “சிந்தனைவட்டமும் நானும்” என்ற ஆவணப்பதிவினை முதலாம் பாகமாகவும்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  மஸீதா புன்னியாமீன் இருவரும் இணைந்தெழுதிய கவிதைத்தொகுதியை இரண்டாம் பாகமாகவும் கொண்டு வெளிவந்துள்ள இந்நூல் சிந்தனைவட்டத்தின் 100வது வெளியீடாகும். 100வது நூல் வெளியீடுவரை சிந்தனை வட்டம் வெளியிட்ட முழு நூல்விபரப்பட்டியலும் இந்நூலில் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.

“சிந்தனை வட்டமும் நானும்” என்ற முதலாம் பாகத்தில் தமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் புன்னியாமீன் அலசியுள்ளார். பாடசாலை வாழ்வின்போது தன்னிடம் மறைந்து காணப்பட்ட எழுத்துத் திறனைத் தனக்கு இனம்காட்டிய ஐ.ஹாஜிதீன்,  யோ.பெனடிக்ட் பாலன் ஆகியோரை இதில் நன்றியுடன் நினைவு கூருகின்றார். தன் 19வது வயதில் “தேவைகள்” என்ற தனது முதலாவது சிறுகதைத்தொகுதி வெளிவந்தமையை பெருமையுடன்ää எழுத்தாளனுக்குரிய இயல்பான மகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு, நவம்பர் மாதம் 2000ஆம் ஆண்டு கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும்,  சிந்தனை வட்டமும் இணைந்து இந்நூலை வெளியிட்டு வைத்திருந்தன. இந்த வெளியீட்டுவிழா நிகழ்வின் பதிவாக அன்றைய நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த மற்றொரு நூல் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்.

அல்ஹாஜ் M.R.M.. ரிஸ்வி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த சுவடு என்ற நூலே அதுவாகும். உடத்தலவின்னை சிந்தனை வட்டம் வெளியிட்டுவைத்துள்ள 115வது நூலாக சுவடு என்ற இந்நூல் அமைந்துள்ளது. இதன் 1வது பதிப்பு ஜனவரி 2001இல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுகஸ்தொட்ட J.J.Printers  அச்சிட்டுள்ள இந்நூல் 148 பக்கம் கொண்டதாகவும்,  ஏராளமான புகைப்பட ஆவணங்களைக் கொண்டதாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் ஒரு புதிய பரிமாணத்தின் சுவடு இதுவாகும் என்று நாம் கூறலாம். ஏனெனில்,  ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளையே ஆவணமாக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி இதுவாகும். 11.11.2000 அன்று கண்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னணியில் நூல்வெளியீடு மாத்திரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் தமிழ் வளர்க்கும் காவலர்களை கொரவித்தல்,  ஏற்கெனவே ஒழுங்குசெய்யப்பட்ட தடாகம் சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய பல இலக்கிய நிகழ்வுகளும் அன்று இடம்பெற்றுள்ளன. இந்த இலக்கிய நிகழ்வில் கௌரவம் பெற்ற ஐவர் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா,  பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம்ää சுயாதீன தொலைக்காட்சிப் பணிப்பாளர்சபை உறுப்பினரான புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர்,  பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளரும் வெளியீட்டாளருமான திரு ஸ்ரீதர்சிங்,  பன்னூலாசிரியரும் கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரே இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள். இவை அனைத்தும் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஆவணத்தொகுப்பாக இந்நூலின் முதலாம் பகுதி அமைந்துள்ளது.

தேன் மலர்கள் கவிதைத் தொகுதி பற்றி கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம் அவர்கள்......

மீன்பாடும் தேன் நாடு கிழக்கிலங்கை
கலைகளின் பிறப்பிடம் ,கவிகளின் இருப்பிடம்,
கலைமகளும், அலைமகளும் காவியம் துய்த்திடும்
கவின் சோலை. அவ்வண்ணச் சோலையில் பூத்து
மனம் பரப்பும் மலர்கள் ஏராளம்! ஹிதாயா றிஸ்வியின்
"தேன் மலர்கள்"இன்று ஒரு கன்னி வெளியீடு!

உள்ளத்துறைத்து,நெஞ்சில் ஊற்றெடுக்கும்
கவிதை,தெள்ளத் தெளிந்த தமிழில் வெள்ளமென
வெளிவரும்,மீனாட்சி  சுந்தரனார் கூற்றுப்போல்,
வெறும் மாதுளம் பழக் கவிதைகளாக இல்லாமல்,
மாதுளையை உடைத்து ஒவ்வொரு தோலாக
நீக்க மணிகள் வெளிவருதல் போல கவிதைகளில்
பொருளாழம் தெரிதல் வேண்டும்.

"சான்றோர் கவியெனக் கிடந்த
கோதாவரியினை வீரர் கண்டார்" என்கிறான்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்,மேற்பார்வையில்
ஆழம் தெரியாமலும்,உண்மையில் மிக்க
ஆழமானதுமான நதியை,சான்றோர் கவிக்கு
உவமை கூறினார்.

கணக்கில் குறித்த இலக்கம் பிசகாமல்
இணைக்கப்படுதல்,அதைப்போல,இசைத்துத்
தெளிவாக மினுக்கி, வகிர்த்து ,உணர்ச்சிப்
பெருக்கில் நனைந்து பி...ழி...ந்து கவியாகும்.

"பெருகிய உணர்வின் இறுகிய சிறைப்பிடிப்பே கவிதை
'உள்ளத்துள்ளது கவிதை,நெஞ்சில்
ஊற்றெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில்
நன்றாய்ச் செப்பிடல் கவிதை'"சுவை புதிது"
பொருள் புதிது,வளம் புதிது,சொற்புதிது,"சோதிமிக்க
நவகவிதை"எனப்பலவாறு கூறப்படும்.

மரபு வழி இலக்கியம் படைத்தல் என்றும்,
மரபும்,இலக்கணமும் கவிஞனைக் கட்டுப் படுத்தா
தென்றும் கருத்துக்கள் உள்ளன. எனினும் ஒரு
மொழிக்குள்ள கவிமரபே அதன் தனித்துவம்.அதனை
விடின் கவிதையின் கவர்ச்சிகுன்றும்.

கவிதைக்குத் தனிவடிவம் உண்டு.அதன்
உருவம் ஓசையில் (Rythm)அமையும்
ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ஓசை
அமைதி உண்டு.பாட்டுப் பாடத் தெரிந்தோர்
யாவரும் கவிஞர்கள் இல்லை.ஆனால் கவிஞர்கள்
பாட்டுப் பாடத் தெரிந்தவரே.

கவிதை அதன் பொருட் சிறப்பால்
உயர்வு பெறும். அதனைச் சொல்லும் பாணியும்
அழகாயிருத்தல் வேண்டும். பழம் பாடல்களும்
ஓசைகளை அறிவுறுத்தும். ஒரு மாத்திரை தப்பின்
ஓசை கெடும்.

கவிதையில் யாப்பிலக்கணங்கள், எதுகை,
மோனை,அழகு அமைந்துள்ள சிறப்பை உணர்ந்து
இன்புறலாம்,ராகலட்சணம் தெரிந்தவர்
சங்கீதத்தை அனுபவிப்பது போல்,சிறந்த கருத்தும்
வடிவமும் பெற்ற பின்னரே அனுபவிக்க முடியும் .

அவ்வடிவம்"கலை"எனப்படும். கவிதையும்
ஒரு கலை.தன்னைப் படைத்தவன்(கவிஞன்)
தன்னுள் போதித்த உணர்ச்சிகளை மற்றவருக்கு
வழங்குதலே அதன் தொழில்.

சொற்கள் எங்கு தமக்கே உரிய பொருட்
செறிவு,எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தி கொண்
டுள்ளனவோ, அங்கே கவிதைகளைக் காணலாம்
என்பர்.

இவ்வாறான அழகுத்  தோற்றங்களை இப்
பெண்ணின் கன்னி முயற்சியில் செறிவாகக் காணலாம்.
விரிவஞ்சி உதாரணத்திற்குச் சிலவற்றைக் காணலாம்.
குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்...
உதிரம் தன்னை தேயிலைக்கே-நல்ல
உரமாய் இட்டு வளர்ந்தனராம்
 மதுரமான தேனீரும் -அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்துவாம்.

 நல்லோர்க்கே சொர்க்கம்..
பெண்ணே வாழ்வின் கண்ணாகும்-அவள்
பெருமையின் அளவோ விண்ணாகும்.
இன்னல் தன்னை அவர்க் கூட்டல்-உயர்
இஸ்லாத்திற்கு முரணாகும்.
 நாங்கள் 
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும்?உயிரைத்தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு!

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்தது நாம் உலவல் எல்லாம்
இனியுந்தான் மாறிடவே வழிகள் காண்போம்.

 கல்வித் தாய் அருள வேண்டும்..
ஏற்றமுடனும் நான் செயும் பணியை சிலவோர்
இயலாமையால் இகழும் நிலையைக் கண்டேன்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்திடவும் சுடரைத்தாவேன்.
.

 ஒரு ஒற்றைக் குயிலின் ஓலம்.
சோலையிலே ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலில் கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் அது
வாடி மனம் வெந்து கூவுதடி.

விளையாட்டுக் கலை வளர்ப்போம்,அன்னை,
கேவலம் வேண்டாம்,தாய்த் தமிழே  வாழி
...இப்படி
பல கவிதைகள் சிறப்புற்று  விளங்கி இழையோடுகின்றன.

"திறமையான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்"என்று
பாரதி கூறியதற்கமைய, மற்றவரும் போற்றும்
வண்ணம்"கலைமகள் ஹிதாயா றிஸ்வி"இன்னும்
பல கவிதை வடிவங்களைப் படைக்க வேண்டும்.
இப்பெண்ணின் முயற்ச்சிக்கு தமிழ் கூறும்
நல்லுலகம் நல்லாதரவு தர
வேண்டி வாழ்த்துகின்றேன்.

மேலும் பல செல்வங்களுடன்
கவிதைச் செல்வங்களையும்,அதிகம்,அதிகம்
பெற்று தமிழன்னைக்கு ஈதல் வேண்டும்.
நீண்ட வாழ்வும்,நிறை சுகமும்
"கலைமகள்  ஹிதாயா றிஸ்வி"பெற்றின்புற
அருட் பெருங் கடலான அல்லாஹ்வைப்
பிராத்திக்கின்றேன்.