ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நூல் ஆய்வு.....

நூல் : நெற்றிக் கண்
ஆசிரியர் : நாகபூஷணிகருப்பையா
நூல் ஆய்வு :கலைமகள் ஹிதாயா றிஸ்வி
                     ஆடுதல்  பாடுதல்  சித்திரம் - கவி
                     ஆதியினை கலைகளில்,
                      ஈடுபட்டென்றும்  உழைப்பவர் -பிறர்
                       ஈன நிலை கண்டு  துள்ளுவர் .


வானொலிக் கலைஞர் நாகபூஷணி கருப்பையாவின் 'நெற்றிக்கண்'எனும் கவிதைத் தொகுதியின்  கவிதைகளைப் படிக்கையில் பாரதியின் மேற்கூறிய கூற்று எம்முள் வந்து செல்வதனைத் தவிர்க்க முடியவில்லை. குரலினாலும் உணர்வுமிக்க ஆற்றல் வெளிப்பாட்டினாலும் அனேக நேயர்களைக் கொள்ளை கொண்டுள்ள நாகபூஷணி,பேராற்றல்மிகு ஆயுதமொன்றைக் கையிலெடுத்துளார் .இவ்வளவு நாட்களும் அவர் வாய்பேசியது,இப்பொழுது அவரது கையும்,அது பற்றிய பேனாவும் பேசத் தொடங்கியுள்ளன.எழுத்தின் மூலம் வெளிப்படுவது  ஒருவரது சுயமேதான்.

தான் கண்டவற்றை,தான் உணர்ந்தவற்றை,தன்னைப் பாதித்தவற்றை.தன்னை மகிழ்வித்தவற்றை,தனது ஏமாற்றங்களை,தனது மாற்றங்களை என்று எல்லாவற்றையும் தாமாகவே,தன்னிலை நின்று பிறருக்குச் சொல்லும் போது மனது மிகவும் திருப்தியுறுகிறது.அந்த உணர்வு வெளிப்பாடு சுயபாஷையில்,சுயனடையில்,சகலவித மழலைத் தன்மையுடனும் தான் தொடங்க வேண்டும் ,இதற்கு எந்தவித இலக்கண இலக்கிய வரையறைகளும் இருக்கத் தேவையில்லை என்பதே எனது கணிப்பு.அந்த வகையில் நாகபூஷணியின் உணர்வுகள் பேசத் தொடங்கியுள்ளன.40 கவிதைகள்.ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.தந்தையின் மீதான பாசமிகு நேசமும்,மதிப்பும்,பொறாமைப்படு
ம் அற்பர்மேல் பரிதாபம்,கள்ளமற்ற மனம்,கபடமாய் மாறிய ஏக்கம்,விழித்தபடி தூங்கும் மக்களின் அறியாமை கண்ட ஆற்றாமை,ஊர்மிளைக்கு நியாயம் கெட்ட உரிமைக்குரல்,அலைகளைச் சிறைப்பட்ட பெண்ணுக்கு ஒப்பிட்ட அங்கலாய்வு,தடைதகர்க்கும் துணிவு,சந்தியா காலத்தையும் மழை நாட்டையும் ரசிக்கும் அழகுணர்வு இப்படி ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு உணர்வுகளைத் தமது பாஷையிலேயே சொல்லி நிற்கின்றன.

நிஜங்களை தரிசித்த,தடம் பதித்த கோலங்கள் கவிதைகளின் வரிவடிவங்களில் பரிணமிக்கின்றன.
                 நிஜங்களின்
                 வேதனைப்
                 பிரசவங்கள்
                 சங்கடங்களில்
                 அழுத்தத்தில்
                 கணக்கும்
                 இதயம்
                 சட்டென்று
                 எதைச் செய்யும்
                 பிரார்த்திப்பதைத் தவிர......
மனவேதனையின் அழுத்தத்தை உள்மனதுள் புதைத்து,வேதனைச் சூட்டை மட்டும் வெளியில் விடுவித்திருப்பது புரிகிறது.உணர்வுகளை அடக்கி வாசிக்கையிலும்.ஒரு இளம்பெண்ணின் உள்மனது வெளியில் தலிகாட்டுவதை அவரால் தடுக்க முடியவில்லை.அவர் விழிபேசும் மொழி எவர்க்கும் புரியாமல் இல்லை.உவமான உவமேயங்களுடன் கூடிய விழிப்பாஷைக்கு மொழி உதவ வேண்டுமெனில்; உரைப்பவரின் கவித்துவம் துனைக்குவர வேண்டும்.நாகபூஷனிக்கு அது தோள் கொடுத்திருக்கின்றது.தொழில் செய்யும் பெண்ணின் அன்றாட நிலைமையை எடுத்துரைக்கையில்,அவரது உள்மனவெளியில் உணர்ச்சிகள் பீறிடுவது புரிகிறது.ஆனால் அவை உணர்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடுவது பரிதாபகரமானது.பிள்ளையே வேண்டாம்,இது ஈனப்பிறப்பென்று,புதுப்ப்டையே வரவேண்டாம் என்று தடுக்கும் அளவுக்கு சமுதாய சீரழிவுகள் மலிந்து கிடப்பது யதார்த்தம்.

மழைக்கால மகழ்ச்சியும்,வெய்யிலின் வேதனையும்,பார்வையின் பாவங்களும்,தாலிக்கு கூலி தரும் சங்கடமும்,நாகமான மண்புழுவின் பரிதாபமும்,கலைஞர் வாழ்வின் கஷ்டங்களும்,கூட்டு வாழ்வின் குதூகளிப்பும்,நட்புக்களின் நயவஞ்சகமும் எனப் பலப்பல விடயங்களைத் தொட்டுள்ளார் நாகபூஷணி. அவரது கவிதைத்துவத்தை நோக்குகையில் கீழ்க்குறிப்பிடப் பட்டுள்ளவை அதற்கு உதாரணங்களே.

                        பிணமென ஆதல் ஒன்றே,
                        பிறப்பின் முடிவென்ற்றரியாது,
                        மணக்கின்ற சாக்கடையாய்,
                        மாறிய மனித குலம்....(அற்பம்)

                       தெளிந்தோடும் அருவிகளும்,
                       நீள்தொடராய்க்   குன்றுகளும்,
                       வழிநெடுக மரங்களுடன்
                       வீசு தென்றல் தவழ்ந்துவர
                       களிகொண்டு ஆடவைக்கும்,
                       கவர்ச்சிமிகு மலைநாடு ....(வளமுள்ள மலைநாடு)


வளர்ந்து வரும் இளம் கலைஞர்களில்,கவிஞர்களில் வளர்ந்து விட்ட அறிவிப்பாளர் நாகபூஷணியும் இருக்கப்போகின்றார்.என்பதற்கு இவரது இந்த கவிதைத்தொகுதி கட்டியம் கூறி நிற்கின்றது.
இவரை  அன்புடன்  அரவணைத்து  ஊக்கப்படுத்தி
 இன்று "நெறிக் கண்"நூலாய் வெளிவர காரணமாய்  இருந்த  தோழி  ஹிதாயாவை  இதயம்  பிராத்திக்கும்  நன்றியோடு  நினைவு  கூறுகின்றார்
சிந்தனை  வட்டத்தின் (180)வது  நூல்  இது புண்ணியாமீன்  சகோதரன்  என் ஓயா நன்றிக்கு  உரித்தானவர்  என்று நன்றியோடு நினைவுப் படுத்துகிறார்.இந்த  பைந்தமிழ் ப்  பாவையின்  நறு ந்தமிழ்  பாக்கள் இன்னும்  செழித்துப்  பூக்கட்டும் !தமிழிக்கினிமைசேர்க்கட்டும் ! என இதயம் கனிந்து  வாழ்த்துகிறேன் .
இவரது முகவரி
நாகபூஷணி கருப்பையா(அறிவிப்பாளர்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
கொழும்பு-07
தொலைபேசி-0777-349737