சனி, 24 டிசம்பர், 2011

நூல் ஆய்வு

 

நூல் : மலரும் மொட்டுக்கள்  
ஆசிரியர் : உ .நிசார்
நூல் ஆய்வு: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

 ' நல்ல கவிதைகள் சமுதாயத்தின் சிறந்த வழி 'அந்த வகையில் இன்றைய காலத்தின் தேவையாக இளஞ் சிறார்கள் நெறிப்படுத்தும் வழி காட்டியாக கவிதைகள் அமைவது அவசியம் .
கவிஞர் உ .நிசார் அவர்களின் இக் கவிதைத் தொகுதி அதற்க்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக அமைகிறது
இன் நூலில் மலரும் மொட்டுக்கள் என்ற கவிதையோடு பதினெட்டுக் கவி மொட்டுக்கள் மலர்ந்து மணம்  பரப்பி
அழகு காட்டி நிற்கின்றன .
இன்றைய மொட்டுக்கள் நாளையமலர்கள் என்பது போல ,இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்தை முதல் கவிதையூடாக ஆசிரியர் விளக்கிச் செல்கிறார்
மேலும் இக் கவிதைத்  தொகுதியில் என்னை வெகுவாகக்
கவர்ந்த்த பாடலாக'உழைத்து  உண்ணப் பழகு 'அமைந்த்துள்ளது இப்பாடல் தாங்கி வரும் ஒவ்வொரு வரியும்
ஒளி வீ சும்முத்துக்களாக அமைந்த்துள்ளது

அக் கவிதையின் சில வரிகள்
உண்மை உரைக்கப் பழகு
       ஊரார் மதிக்கப்  பழகு
நன்மை செய்யப் பழகு
       நாவை பேணப் பழகு

ஒற்றுமை ஓங்கப் பழகு
      உறவை வளர்க்கப் பழகு
வெற்றி கொள்ளப் பழகு
     வேற்றுமை  தவிர்க்கப் பழகு
இன்னும் ஒரு கவிதையில்

குழந்தாய் குழந்தாய்  கதை கேளு
கொஞ்சும் தமிழில் கதை கேளு
விழுந்த ஆப்பிள் பழமொன்றால்
விஞ்ஞானம் வளர்ந்த கதை கேளு

ஐசெக்  நியூற்றன் அன்றொரு நாள்
ஆப்பிள்மரத்தின் நிழலொன்றில்
ஓய்வாய் இருக்க ஆப்பிலொறு
தலையில்  விழுந்த கதை கேளு

இவ்வாறு நல்ல பல ,ஆசிரியாரின் கற்பனையில்  மணம் வீசுகின்றது மலரும் மொட்டுக்கள் வா வெண் புறா கல்வி கற்ப்போம் ,கல்யாணம் ,குட்டி முயலே , காந்தி தாத்தா ,மரங்கள் நடுவோம் ,எங்கள் குடும்பம் ,புகைவண்டி ,தப்பி பாப்பா ,மரங்கள் , ஏற்றமிகு இலங்கை ,இரவு சிரித்தது , உழைத்து உன்னப்  பழகு புவியீர் ப்புவிசை ,இன்று போய் நாளை வா , 
நியாயம் எங்கே ,பந்தடிப்போம் இவ்வாறு தலைப்புக்களில் கவிதைகள் இடம் பெற்று உள்ளன
பதினைந்து  வருடங்களுக்கு மேலாக தரம்   ஐந்தில் கற்பித்தல் பணியில் கவிஞர் ஈடுபட்டதால் சிறுவர்களின்  மனப்பாங்கு , ,சிறப்பாற்றல்கள் ,சொல்வளம் ,கலையுணர்வு ,அனுபவரீதியாக நன்கு உணர எனக்குவாய்ப்பு கிடைத்ததால் தான் சிறுவர்களுக்கான பாடல்களை இயற்றுவதில் தனக்கு பெரிதும் உதவியாக இருந்தததாக ஆசிரியர்  குறிப்பிடுகிறார்
இன் நூலில் எதுகை ,மோனை ,சந்தம் என்பன ஒருங்கே அமைய இயற்றப் பட்டுள்ளதால் சிறுவர்கள் ஓசையுடன் பாடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு .இந்த நூல் இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சினாலும் மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரநைலனைல்  அச்சிடப்பட்டுள்ளது
நூலைப் பெற விரும்போவோரும்  ஆசிரியருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர்
உ .நிசார் ,
70/3, புதிய கண்டி  வீதி ,
மாவனல்லை
இலங்கை 
தொலை பேசி .035.2248409.

சனி, 19 நவம்பர், 2011

மனங்களின் ஊசல்கள்

நூல் : மனங்களின் ஊசல்கள்
ஆசிரியர் : தாரிக்கா  மர்சூக்
நூல்ஆய்வு : கலைமகள்  ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின்  கலை இலக்கிய  பூங்காவில் நறுமணம் வீசும்  கலைப் பூக்கள் மிக...  மிக..அரிதாக  பூக்கும்  இடம்  தான் குருநாகல்  பிரதேசம் .
இந்த இடத்தில் தென்றலோடு  கலந்து நறுமணம்  வீசும் ஒரு சில  பூக்களில் ஒன்று தான் இந்த தாரிக்கா  மர்சூக்.
கவிதை,கதை  என்று எம் மத்தியில் பல நூல்கள் பூத்தாலும் கூட கட்டுரை நூல்கள்  பூப்பது மிகக் குறைவானதே ஆகும் .ஏழு  வயதில் கவிபாடிய சுப்பிரமணிய பாரதியை ஞானக் கண்ணாற் பார்க்கும் நம்மில் சிலர், ஏனோ இன்று பதினைந்து - இருபது வயதுகளில் கலை இலக்கியம் படைக்கும் எம் யுவதிகளை வாலிபர்களை, ஊனக் கண்ணாற் பார்ப்பது காணக் கூடிய செயலே.
பேரும் புகழும் வரவேண்டு மென்று எழுதுகின்றார்களே என்று எம் மத்தியில் தரமான கலையுள்ளங்களை வளர விடாது தடுக்கும் இவர்கள் ஏன்  சமூகத்துக்குச் செய்யும் தூய்மையான பல  காரியங்களுள் இலக்கியம்  படைப்பதுவும்  ஒன்றாகும் என்பதை மறந்து  விடுகிறார்கள்
இங்கே தாரிக்கா இலக்கியமே இலட்சியமாய் இலட்சியமே  இலக்கியமாய்  கருதுகின்றார். தனது நெஞ்சக் கனலில் நீராகி  தன்னைத் தானே நீராக்கி கொண்ட அனுபவத்தை தான் "மனங்களின் ஊசல்கள் "மூ லமாக உணர் வோமியமாக்கித் தந்து  உள்ளார் .
விரைந்து  செல்லும்  உலகத்தில் விரிந்து செல்லும் அனுபவ நூதனங்களில் திசைகளைத் தொலைத்து  திருப்தி இழந்து வரும் மனிதர்களின்  வாழ்வுக்கு ஒரு புத்தி ஜீவிகளின் தாகத்தைப்  போல தாரிக்கா ஒரு  தாகத்தில் தவிப்பதை   "மனங்களின் ஊசல்கள்" மறு பதிப்புச்  செய்கிறது .
படைப்பிலக்கியம்  மனித  வாழ்க்கைக்கு பயனளிப்பதாய்  இருக்க வேண்டும்  என்ற நம்பிக்கையோடு தாரிக்கா எழுதுவதை அவரது  சிந்தனை யோட்டத்திலிருந்து  தெரிந்து  கொள்ள முடிகிறது.இந்த  உலகத்தின் எந்த ஒரு
மூலையிலாவது அடையாளம்  தெரியாத  யாரவது  சிலராவது  தாரிக்காவின்   மனங்களின் ஊசல்களால் மறு  பிறவி  எடுக்கக்  கூடும் என்ற  நம்பிக்கை  எனக்கு  இருக்கிறது .
இலங்கையின்  ஒரு  கரையோரத்தில் யாரும் அறியாத ஒரு மூலையில்  இருந்து கொண்டு  மானிட நேயத்தின்  உந்துததால் போதனைக்கென்று புறப்பட்டிருக்கும்  இந்தப்  பெண்ணின் மீது பிரியமே  அதிகரிக்கின்றது. உலகத்தைச் சுற்றிச்  சிறகடித்துப்  பறந்து உயிர்களின் அவஸ்தைகளோடு  உறவாடும் சந்தர்ப்பங்கள்  தாரிக்காவுக்கு சுதந்திரமாக்கப் பட்டிருப்பதால் நாடு போற்றும் ஒரு  சிந்தனைப் பெண்  போராளியை  நாம் தரிசிக்க  முடியும்.
    
சிந்தனை வட்டத்தின் (215) ஆவது வெளியீடாக "மனங்களின் ஊசல்கள்"கட்டுரைத் தொகுதி  வெளியாகி உள்ளது. இதில்  மொத்தம் (55) கட்டுரைகள்  உள்ளன.கடமையற்றவனுக்கு  உரிமை  இல்லை , பிரச்சினைகளில் நாம் ,அனுபவமே அறிவு, வீர்வாகி நீங்களே வேண்டாமே ,பொறாமை,அவசர  யுகம்,வெற்றின் இரகசியம் , யோசனைகளை கூர்மையாக்கும் விமர்சனங்கங்கள் ,முயற்சியே முதற்படி ,வெற்றி ஒரு பாடத்திட்டம் ,நீங்களும் தலைவராகலாம் ,ஊனமுற்ற சிறுவர்கள் ,வாழ்க்கை  வாழ்வதற்கே ,குடும்பப் பிரச்சினைகளின் தீர்வு இதுதான்
ஆசிரியர்களின் தவறு ,மனங்களிடையே நட்புறவு ,தாயின் தவறு,  விவகாரத்தின் விபரீதம் ,நான் என்கின்ற மையம் ,தொழில் ஒரு தூக்குக் கயிறாய் ,சிறகை விரித்ததால் சிகரம் தொடலாம் ,வீட்டுப் பிரச்சினைக்கு  மருந்து வீட்டுக்குள்ளேயே ,பிள்ளைகளை துன்புறுத்தும் தாய் , ஏழைகளுக்கு உதவுங்கள் , முதுமை,இல்லறத்தில்அமைதி நிலை,திருமணம் பெற்றோர் சம்மதம்  தேவையா,வார்த்தைகளிலே வாழ்க்கை,நன்றி சொல்ல வேண்டும், திறமை புறக்கடிக்கப்படுகிறதா ?, இன்றைய
இளைஞர்கள்,படிப்பே பாரமா ?, வாழ நினைத்தால் வாழலாம் ,கசப்பாகி துப்பி  வீசுங்கள் ,தப்பு ஏன் ,எங்கே தேடுகிறீர்கள் ,விதியை நம்பாதீர்கள் , மனம் விட்டுப் பேசுங்கள் ,காலம் கடந்த கை சேதம் ,வாழ்க்கைக்கு ஒரு ஏவுகனை ,வேலை செய்யும் பெண்களின் பிரச்சினைகள் ,தோல்விகளுக்கு நியாயம் இல்லை ,நாம் நமக்குள் முழுமையானால் ,வாழ்க்கை என்பது , அந்த நாள்  ஞாபகம்,ஆசை அலை போல, மன்னிப்பும் மருந்தாகும் ,மன நிம்மதிக்கு என்ன விலை,ஆளுமை இன்றேல் தாழ்மை தான் ?,படித்தால் மட்டும் போதுமா ?,யார் பரிபூரணவாதி ,மாசற்ற  மனமே ,பலமும் பல வீனமும் ,அன்பான பேச்சு ,பெறோரின் நலன் பேணல்  போன்ற தலைப்புக்களில்  கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நூலை வெளியிட  ஊக்கத்தை ஏற்படுத்தியதுடன்  இந்த  நூல்வெளிவர  காரணமாயிருந்த  அன்புச் சகோதரி ஹிதாயாவை குளிர்ந்த மனதோடு  நினைவு  கூருகின்றார்.
பூமிக்கடியில் ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் 
அடிமரம்  போல் தாரிக்காவின் சிந்தனைகளும்  நீண்டு செல்ல தூய   மனதோடு வாழ்த்துகின்றேன் ..
நூலாசிரியருடனான சகல் தொடர்புகளுக்கும், 
 mrs .tharika marzook
no .32/2,lake side estate,
kurnagala.srilanka .

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நூல் ஆய்வு.....

நூல் : நெற்றிக் கண்
ஆசிரியர் : நாகபூஷணிகருப்பையா
நூல் ஆய்வு :கலைமகள் ஹிதாயா றிஸ்வி
                     ஆடுதல்  பாடுதல்  சித்திரம் - கவி
                     ஆதியினை கலைகளில்,
                      ஈடுபட்டென்றும்  உழைப்பவர் -பிறர்
                       ஈன நிலை கண்டு  துள்ளுவர் .


வானொலிக் கலைஞர் நாகபூஷணி கருப்பையாவின் 'நெற்றிக்கண்'எனும் கவிதைத் தொகுதியின்  கவிதைகளைப் படிக்கையில் பாரதியின் மேற்கூறிய கூற்று எம்முள் வந்து செல்வதனைத் தவிர்க்க முடியவில்லை. குரலினாலும் உணர்வுமிக்க ஆற்றல் வெளிப்பாட்டினாலும் அனேக நேயர்களைக் கொள்ளை கொண்டுள்ள நாகபூஷணி,பேராற்றல்மிகு ஆயுதமொன்றைக் கையிலெடுத்துளார் .இவ்வளவு நாட்களும் அவர் வாய்பேசியது,இப்பொழுது அவரது கையும்,அது பற்றிய பேனாவும் பேசத் தொடங்கியுள்ளன.எழுத்தின் மூலம் வெளிப்படுவது  ஒருவரது சுயமேதான்.

தான் கண்டவற்றை,தான் உணர்ந்தவற்றை,தன்னைப் பாதித்தவற்றை.தன்னை மகிழ்வித்தவற்றை,தனது ஏமாற்றங்களை,தனது மாற்றங்களை என்று எல்லாவற்றையும் தாமாகவே,தன்னிலை நின்று பிறருக்குச் சொல்லும் போது மனது மிகவும் திருப்தியுறுகிறது.அந்த உணர்வு வெளிப்பாடு சுயபாஷையில்,சுயனடையில்,சகலவித மழலைத் தன்மையுடனும் தான் தொடங்க வேண்டும் ,இதற்கு எந்தவித இலக்கண இலக்கிய வரையறைகளும் இருக்கத் தேவையில்லை என்பதே எனது கணிப்பு.அந்த வகையில் நாகபூஷணியின் உணர்வுகள் பேசத் தொடங்கியுள்ளன.40 கவிதைகள்.ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.தந்தையின் மீதான பாசமிகு நேசமும்,மதிப்பும்,பொறாமைப்படு
ம் அற்பர்மேல் பரிதாபம்,கள்ளமற்ற மனம்,கபடமாய் மாறிய ஏக்கம்,விழித்தபடி தூங்கும் மக்களின் அறியாமை கண்ட ஆற்றாமை,ஊர்மிளைக்கு நியாயம் கெட்ட உரிமைக்குரல்,அலைகளைச் சிறைப்பட்ட பெண்ணுக்கு ஒப்பிட்ட அங்கலாய்வு,தடைதகர்க்கும் துணிவு,சந்தியா காலத்தையும் மழை நாட்டையும் ரசிக்கும் அழகுணர்வு இப்படி ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு உணர்வுகளைத் தமது பாஷையிலேயே சொல்லி நிற்கின்றன.

நிஜங்களை தரிசித்த,தடம் பதித்த கோலங்கள் கவிதைகளின் வரிவடிவங்களில் பரிணமிக்கின்றன.
                 நிஜங்களின்
                 வேதனைப்
                 பிரசவங்கள்
                 சங்கடங்களில்
                 அழுத்தத்தில்
                 கணக்கும்
                 இதயம்
                 சட்டென்று
                 எதைச் செய்யும்
                 பிரார்த்திப்பதைத் தவிர......
மனவேதனையின் அழுத்தத்தை உள்மனதுள் புதைத்து,வேதனைச் சூட்டை மட்டும் வெளியில் விடுவித்திருப்பது புரிகிறது.உணர்வுகளை அடக்கி வாசிக்கையிலும்.ஒரு இளம்பெண்ணின் உள்மனது வெளியில் தலிகாட்டுவதை அவரால் தடுக்க முடியவில்லை.அவர் விழிபேசும் மொழி எவர்க்கும் புரியாமல் இல்லை.உவமான உவமேயங்களுடன் கூடிய விழிப்பாஷைக்கு மொழி உதவ வேண்டுமெனில்; உரைப்பவரின் கவித்துவம் துனைக்குவர வேண்டும்.நாகபூஷனிக்கு அது தோள் கொடுத்திருக்கின்றது.தொழில் செய்யும் பெண்ணின் அன்றாட நிலைமையை எடுத்துரைக்கையில்,அவரது உள்மனவெளியில் உணர்ச்சிகள் பீறிடுவது புரிகிறது.ஆனால் அவை உணர்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடுவது பரிதாபகரமானது.பிள்ளையே வேண்டாம்,இது ஈனப்பிறப்பென்று,புதுப்ப்டையே வரவேண்டாம் என்று தடுக்கும் அளவுக்கு சமுதாய சீரழிவுகள் மலிந்து கிடப்பது யதார்த்தம்.

மழைக்கால மகழ்ச்சியும்,வெய்யிலின் வேதனையும்,பார்வையின் பாவங்களும்,தாலிக்கு கூலி தரும் சங்கடமும்,நாகமான மண்புழுவின் பரிதாபமும்,கலைஞர் வாழ்வின் கஷ்டங்களும்,கூட்டு வாழ்வின் குதூகளிப்பும்,நட்புக்களின் நயவஞ்சகமும் எனப் பலப்பல விடயங்களைத் தொட்டுள்ளார் நாகபூஷணி. அவரது கவிதைத்துவத்தை நோக்குகையில் கீழ்க்குறிப்பிடப் பட்டுள்ளவை அதற்கு உதாரணங்களே.

                        பிணமென ஆதல் ஒன்றே,
                        பிறப்பின் முடிவென்ற்றரியாது,
                        மணக்கின்ற சாக்கடையாய்,
                        மாறிய மனித குலம்....(அற்பம்)

                       தெளிந்தோடும் அருவிகளும்,
                       நீள்தொடராய்க்   குன்றுகளும்,
                       வழிநெடுக மரங்களுடன்
                       வீசு தென்றல் தவழ்ந்துவர
                       களிகொண்டு ஆடவைக்கும்,
                       கவர்ச்சிமிகு மலைநாடு ....(வளமுள்ள மலைநாடு)


வளர்ந்து வரும் இளம் கலைஞர்களில்,கவிஞர்களில் வளர்ந்து விட்ட அறிவிப்பாளர் நாகபூஷணியும் இருக்கப்போகின்றார்.என்பதற்கு இவரது இந்த கவிதைத்தொகுதி கட்டியம் கூறி நிற்கின்றது.
இவரை  அன்புடன்  அரவணைத்து  ஊக்கப்படுத்தி
 இன்று "நெறிக் கண்"நூலாய் வெளிவர காரணமாய்  இருந்த  தோழி  ஹிதாயாவை  இதயம்  பிராத்திக்கும்  நன்றியோடு  நினைவு  கூறுகின்றார்
சிந்தனை  வட்டத்தின் (180)வது  நூல்  இது புண்ணியாமீன்  சகோதரன்  என் ஓயா நன்றிக்கு  உரித்தானவர்  என்று நன்றியோடு நினைவுப் படுத்துகிறார்.இந்த  பைந்தமிழ் ப்  பாவையின்  நறு ந்தமிழ்  பாக்கள் இன்னும்  செழித்துப்  பூக்கட்டும் !தமிழிக்கினிமைசேர்க்கட்டும் ! என இதயம் கனிந்து  வாழ்த்துகிறேன் .
இவரது முகவரி
நாகபூஷணி கருப்பையா(அறிவிப்பாளர்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
கொழும்பு-07
தொலைபேசி-0777-349737

சனி, 16 ஜூலை, 2011

நூலாய்வு

நூல்: விடியலின் விழுதுகள்
நூலாய்வு:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூல் ஆசிரியை:ஸக்கிய்யா சித்தீக் பரீத்


மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வாழ்விடமாகவும் கொண்ட இந்த நூல் ஆசிரியை ஸக்கிய்யா பரீத்.கொழும்பு  ஸாஹிராக்  கல்லூரியின் ஆசியைகளில் ஒருவர். இவர் தமிழறிவும் ,ஆற்றலும்   ,கற்பிக்கும் திறனும் ,ஆளுமையும் கொண்டவர்.அறிஞர் ஏ.எம்.ஏ அசீஸ் கலாநிதிக்குப் பிறகு ஸாஹிராவில் இறுதியாக நடை பெற்ற முத்தமிழ் விழாவின் போது ஸக்கியாவின்  வகிபாகம் மகத்தானது.அவ்விழாவில் வைத்தே தனது  முதலாவது நூலான "ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் "என்ற நூலைப் பிரசவித்தார்.திருமதி ஸக்கியாவின் ஆசிரியர் வாண்மையும் நல்லொழுக்கப் பண்பாட்டு  விழுமியங்களும் ஒரு புறமிருக்க அவரது எழுத்து வாண்மையைப் பற்றியும் சற்று அலச வேண்டியிருக்கிறது.பொதுவாகவே ஓர் ஆசிரியராயிருப்பவருக்கு சரளமாய் எழுதவும்,பேசவும் இயலும் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை தான்.ஆனால் அவர்கள் அனைவராலும் மிகச் சிறப்பான முறையில் கதை,கட்டுரை,கவிதைகள் வடிக்க முடியுமா? என்பது ஐயத்துக்குறியதே  .ஆனால் எமது தாய்த் திரு நாட்டைப் பொறுத்த அளவில் மிகச் சிறந்த இலக்கியவாதிகளும்,எழுத்தாளர்களு
ம் ஆசிரியர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்,இருந்தும் வருகின்றனர்.இவர் திருப்பம்,மங்கா வடு,காலத்தின் கோலம்,கண்ணீர் எழுப்பிகள்,இறைத் தீர்ப்பு,திசை மாறிய பறவை,நிரபராதிகள்,கோக்கி யார்?,மின்னும் தாரகை,இணங்கிப் போ மகளே!,இழவு காத்த கிளி,முக்காட்டினுள் மாமி,நியதி போன்ற பதின்மூன்று தலைப்புக்களில் இவரது சிறுகதைகள் விடியலின் விடிவுகள் நூலாக தோன்றியது.சுப்ரமணிய பாரதி கூட,தனது பா,கவிதை வடிவங்களோடு உரைநடையில் காத்திரமான கட்டுரைகளை படைத்தளித்த தோடு சமூக நீதியைப் போதிக்கும் சிறுகதைகளையும் எழுதினார்."சிறுகதை மன்னன்"என்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றிப் புகழப்படும் புதுமைப்பித்தன் போலவே இலங்கையிலும் பல புகழ்மிக்க சிறுகதை ஆசிரியர்கள் தோன்றினார்.புதுமைப்பித்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.அவரினால் ஈர்க்கப்பட்டு அவரின் அருட்டுணர்வில் யதார்த்த பூர்வமான சிறுகதைகள் வடித்தவர்தான் இலங்கையின் கிழக்கு மண்ணைச் சேர்ந்த "பித்தான் ஷா"என்பவர்.கே.எம்.ஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர் புதுமைப்பித்தன் மீது கொண்ட அபிமானத்தால் தந்து பெயரைப் "பித்தன் ஷா"என்றே மாற்றியமைத்துக் கொண்டார்.இவரது சிறுகதை சர்வதேசத்தரம் வைத்ததாகும்.இவரை நிகர்ந்த பல சிறுகதை ஆசிரியர்கள் எமது நாட்டிலும் தொன்றியுருக்கின்ற்றனர் அவர்களுள் இலங்கையர்கோன்,மூ.தளையசிங்கம்,தாழையடி சபாரித்தனம்,டொமினிக் ஜீவா,கே.டானியல்,தெளிவத்தை ஜோசப்,செ.யோகநாதன்,மருதூர்க் கொத்தன்,அ.ஸ.அப்துஸ் ஸமது,பீ .எம்.புன்னியாமீன்  போன்றோர் (பட்டியில் நீண்டது) குறிப்பிடத்தக்கவர்கள்.காலச்சுழற்சியில் பலர் மறைந்து போகச் சிலரே எஞ்சி நிற்கின்றனர் புதியவர்கள் சிலரும் முனைப்புடன் சிறுகதைகள் படைத்தளிக்கின்றனர்.புதியவர்களில் எஸ்.எல்.எம்.மன்சூர்,ராஞ்ச குமார்,திக்குவல்லை கமால் (இன்னும் பலர்)போன்றோரைக் கோடிட்டுக் காட்டலாம்.எமது பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அதுவும் முஸ்லிம் பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் சிறுகதை படைத்தளிப்போர் எம்மத்தியில் மிகக் குறைவு என்று தான் கூறவேண்டியுள்ளது.எமது பெண் படைப்பாளிகள் அதிகமாகம் கவிதைகளையே எழுதிவருகின்றனர்.சிறுகதைகள் அல்லது நாவல் என்று வரும் போது வெகுசிலரே எம் மனக்கண்முன் நிற்கின்றனர்.ஒரு நயீமா சித்தீக்கும் ஒரு சுலைமா ஏ ஸமீயும்,ஒரு கெக்கிராவை ஸஹானாவும் ஒரு மஸீதா புன்னியாமீனும்  ஒரு புர்கான் பீ இப்திகாருமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நான் குறிப்பிடும் இவர்கள் அனைவரும் சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.கலைமகள் ஹிதாயா றிஸ்வி,எம்.ஏ. ரஹீமா,சம்மாந்துறை மசூரா, சித்தி ரிஜா,காத்தான்குடி நஸீலா,ஜரீனா முஸ்தபா,ஜெனீரா அமான்,பௌசியா நூர்தீன்,சர்மிளா ஸைத் போன்ற  சில நல்ல சிறுகதை ஆசிரியைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரகாசித்தாலும் இன்னும் இவர்கள் இலைமறை காய்கள் என்றே கூறவேண்டியுள்ளது.திருமதி ஸக்கியா சித்தீக்,ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்.தமிழ் மொழியை நன்கு கற்றவர் உண்மையில் எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.சிறுகதை எழுதும் ஆற்றலும் ஆளுமையும் கற்பனை வளமும் கதை கூறும் பாங்கும் வைக்கப் பெற்ற இவர் ஏன் இது கால வரை பத்திரிகைகளுக்கு எழுதாமல் இருந்தார் என்பது தான்.ஆனால் இத்தொகுப்பின் மூலம் இவரது மேதாவிலாசம் நாடெங்கும் துலாம்பரமாகத்தான் போகிறது.அன்றாட நடைமுறைகளை யதார்த்த பூர்வமாகச் சொல்கிறார்.தனிமனித அவலங்கள்,சமூக நெறிமுறைகள்,மனித நேயமும் அதற்கெதிரான நடத்தைகளும்,கழிவிரக்கம் போன்ற கருத்தியல்கள் இவரது கதைகளில் விரவிக்கிடக்கின்றன.உதாரணமாக திசைமாறிய பறவை,இணங்கிப் போ மகளே,கோக்கி யார்? போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை."காலத்தின் கோலம்"என்ற சிறுகதை நகைச்சுவைரசம் சொட்ட எழுதிப்பட்டுள்ளது.சிறிய சிறிய பந்திகளாக "விறு விறு"என்று கதை சொல்லப்படுவதனால் வாசகர்களது மனதில் ஓர் ஆவலைத்தூண்டி முழுக்கதையும் ஒரே மூச்சில் வாசித்து விடவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் கதாசிரியை வெற்றிகொண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.திருமதி ஸக்கியா சித்தீக்கின் கதை சொல்லும் ஆற்றல் மேலும் விரிவடைந்து இன்னும் சில சிறந்த தொகுதிகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இத் தொகுப்பின் வெற்றிக்கு எனது ஆசிகளை வழங்குகின்றேன்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

மூடு திரை

நூல்: மூடு திரை (சிறு கதை தொகுதி)
 ஆசிரியர்: மஸீதா புன்னியாமீன்
நூல்ஆய்வு : கலைமகள்ஹிதாயாறிஸ்வி

வானைத் தொட்டு  விட வேண்வாக் கொண்டுவளர்ந்த மலைகள், அதில் தங்கி களைப பாற்றிக் கொள்ளும் வெண் பஞ்சு முகில்கள்,பொன் வண்ண மழை மங்கையின் மேனியெங்கும் போர்த்தியிருக்கும்,தேயிலைப் பசும் பட்டாடைகள் தாயின் மார்பில் ஊறிச் சுரக்கும் ஜீவ அமுதம் போல் மழை மாதாவின் இதயத்தில் ஊறிச் சுரந்து ஓசையிட்டுப் பாடி வரும் குளிர் நீர் அருவிகள்.இயற்கையும்,செயற்கையு
ம் இணைந்து கை கோர்த்து களி நடம் புரியும் கவின் மிகு காட்சிகள்.இந்த அழகு ஓவியம் நிறைந்த மலையகத்தை வசிப்பிடமாக கொண்டவர் மஸீதா புன்னியாமீன். காலி கட்டுக் கொடையை பிறப்பிடமாக கொண்டவர்.கணித விஞ்ஞான ஆசிரியையான இவர்  80 காலப் பகுதியில் கலையுலகில் பிரசித்தார்.இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்.அழகான பார்வையும்,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய்,கவிஞராய் தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது கவிதைகளும் கதைகளும் காத்திரமான கருத்தாலமிக்கது.சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது கதைகளில் நிறைந்து காணப்படும்.பெண்ணியத்தை கண்ணியமாய் மதிக்கத் தெரியாத காட்டு மிராண்டித் தனம்,காடைத்தனம்,சமுதாய அடக்கு முறை,ஒடுக்கு முறை ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் பாங்கில்,இவரது கதை போக்கு சரிவில்லாமல் வளர்ந்து செல்லும்."நாளைய சந்ததியின் இன்றைய சக்தி"என்ற இலச்சினையோடும்,இலட்சியத்தோடும் இடையுறது உழைத்து வரும் "சிந்தனை வட்டத்தின்"298 வது வெளியீடாக மஸீதா புன்னியாமீனின் "மூடு திரை"எனும் சிறுகதைத் தொகுதி.இந்த தொகுதியில் 09 சிறுகதைகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. அவற்றில்,"நிலவுக்கொரு மூடுதிரை"எண்ணும் தலைப்பிலான சிறுகதை,விதவை சமீராவின் விசும்பலை,விரக்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.வாழாவெட்டியாய் வயிற்றுப்பாட்டுக்குவழி தேடியவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வனிதையரின் வாழ்க்கைச் சவடால்கள் கதைக் கருவாய் சுட்டப்படுகின்றன.
                                       ".........அந்திப்பட்டா ஊட்டோட வாசலோட அடங்கியிருக்காம,எங்க போய் தொலஞ்சண்டு......கேட்டன்.கண்ட கண்ட கழுதயெல்லாம் ஒண்ட உம்மா எப்படி ஈக்கா என்று சாட கேக்கிறானுவள்.வாப்பா இல்லாமப் போனபொறவு நீங்க முந்தி மாதிரி இல்ல...இப்ப..."
 மண்வாசனை சொற்களோடு கூடிய இக்கதை,விதவைகளுக்கு மறுமணம் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது."கறைகளும் கரைகளும்"என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகின்றன.தளர்ச்சி கண்டு தள்ளாடும் தந்தையைத் தணியாத தாட்சணியத்தொடு தாபரிக்கும் தனயன்,அவனது அன்புக்கு அடிமையாகி,அடக்கவொடுக்கமாய் மாமனாரை மதித்து மரியாதை செய்யும் மனைவி -மக்கள் என,படைக்கப்பட்ட கதா பாத்திரங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால்,அதுவே பெரும் மன நிறைவைத் தரும்."நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்பதற்கு இந்தக் கதை அழுத்தம் கொடுக்கின்றது.கதாசிரியை மஸிதா புன்னியாமீன்,சுனாமிப் பேரலைச் சூறையாடலையும் சொந்த வாழ்வில் கண்டு,சொந்த பந்தங்களை இழந்து சொகித்த்தவர்.அந்த அனுபவத்தின் அவதிப்பாட்டை அவர் "முகவரியில்லா முகம் "என்ற கதையில் வேதனை விசும்பலோடு வெளிப்படுத்தியுள்ளார்.காலி மாவட்டக் கட்டுக் கொடைக் கடற்கரை உறவினரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தை அக்கதையில் நாம் காணலாம்."துருவங்கள்"என்னும் கதையில்,இரு வேறு கதாபாத்திரங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்றன.அளவோடு குழந்தைகளைப் பெற்று,வளமோடு வாழ வேண்டுமென எண்ணும் தாய் ஒரு புறம்."இறைவன் தருகிறான்.நாங்கள் பெறுகிறோம்....."என்ற வீறாப்புடன் வாயாடி அளவுக்கதிகமாகக் குழந்தைகளைப் பெற்று,பேணி வளர்க்க தெரியாத தாய் ஒரு புறம்.இரு சாராரும் வெவ்வேறு துருவங்கள் என்பதைக் கதாசிரியர் சுட்டியுள்ளார்.உருவம்,உள்ளடக்கம்,உத்திமுறை அனைத்தும் ஒவ்வொரு கதையிலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.மஸீதா புன்னியாமீன் படைத்த சிறுகதைகளில்,நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த நியம வாழ்வை  நாம் தரிசிக்க முடிகின்றது."நெருடல்கள்"என்னும் தலைப்பில் அமைந்த கதை வேலைக்கமர்த்தப்பட்ட ஏழைச் சிறுவனைப் பற்றியது.அச்சிறுவன் வீட்டுக்காரியல் ஏச்சுப் பேச்சுக்களால் துன்புறுத்தப் படும் போது,அவளின் மகள்,அந்த "எத்தின்"மீது கழிவிரக்கங்கொண்டு தாயைக் கண்டிக்கின்றாள்;உழைக்கும் வர்த்தகத்துக்கு உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த மனம் படித்தவளாய் விளங்குகிறாள்.உழைக்கும் வர்க்கத்தை உதாசீனப்படுத்தாமல்,ஒறுத்து நோக்காமல்,உயர்வை என்ன வேண்டும்;என்ற உயர்ந்த மனப்பாங்கை "சுகமாகிப் போன சுமை"என்ற கதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் மஸீதா புன்னியாமீன் .கதையில் வரும் கதாப்பாத்திரமான கபீர் மாஸ்டர்,தனது அந்திமகாலத்தில் தனக்குரிய வீடு வாசலை நாகூர் பிச்சை என்ற தனது அடிமைக்கு உரித்துடையதாய் உறுதி முடித்து வைக்கிறார்.அவரது மக்கள் தந்தையின் உயர்வான எண்ணத்தை மதித்து,அந்த வேலைக்காரனை உறவுக்காரனாய் அணைத்துக் கொள்கின்றார்கள்.இவ்வாறு,ஒவ்வொரு கதையும் ஒழுக்க மேம்பாட்டையும்,ஒப்ப செப்பமான உயர்ந்த வாழ்க்கைப் போக்கையுமே வலியுறுத்தி நிற்கின்றன.சிறந்த சிறுகதைத் தளத்திற்குச் சோடினை தேவை இல்லை;சுற்றி வளைத்துச் செல்லும் சாகசம் தேவையில்லை.சுவைஞனின் சுவைப்புலத்தைச் சுவீகரித்துக் கொள்ளும் சொல்லாட்சி மட்டும் இருந்தாற் போதும்.இந்த இலாவணியமும்,இரசனையும் இழையோடியணவாய் தோப்பில் மீரான்,சுஜாதா முதலானோரின் கதைகளில் அந்த அழகை நான் கண்டு மகிழ்கின்றேன்."கரும்புள்ளிகள்"என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கரு இதற்கு நிதர் சமனாகும்.மானிடத் தளம்பல்கள்,மனக்குழப்பங்கள்,மானிதப் பண்புகள் முதலானவற்றைக் கதாசிரியர்கள் கற்பனையில் படைக்கும் போது கையாளும் உத்தி முறைமை ஆளுக்காள் வேறுபடுவதை நாம் காணலாம்.கதாபாத்திரக் கூற்றாக வெளிப்படுவான இன்னும் சில.இந்த இருமுகத் தன்மையும் மஸீதா புன்னியாமீன்  கதைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.சோடை போகாத சுவைத் தன்மை இவரது கதைகளில் நிறைந்துள்ளன.அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
                                                                    இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

மலைச் சுவடுகள்

நூல்: மலைச் சுவடுகள்.
ஆசிரியர்:மாரிமுத்து சிவக்குமார்.
நூல் ஆய்வு:கலைமகள் ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின் இன்றைய தமிழ் இலக்கியப்  பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப் படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக... குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.

அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85 வரையிலான காலகட்டத்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும், இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ  வித்தியாசம். அன்று இலக்கியமே இலட்சியமாய்,இலட்சியமே  இலக்கியமாய் இருந்தது.

பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம்.வாசிப்புத்தன்மை எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது.சின்னத்திரைகளில் ,படங்களையும்,நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும் ,சஞ்சிகைகளும் இன்று எங்கே?
இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும் ,கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக்  குறைவாகவே காணப்படுகின்றன.வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால்  தோண்டப்படுகின்றனர்.நாமங்களைக் கொண்டு தரமானப் படைப்புக்கள் கூட சில தீய சக்திக ளினால் புதைக்கப்படுகின்றன.இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கலைஞர்களான வைரமுத்து ,மு.மேத்தா,அப்துல் ரஹ்மான் போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு  ஏன் இலங்கை கவிஞர்களது எம் தேசத்தில் கிடைப்பதில்லை ஏன் அவர்களுக்கு நேசக் கரம்  நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றிவிடக் கூடாது! அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து  விடக் கூடாது.இதை எம் மண்ணில் வாழும் கலை உள்ளங்கள் உணர வேண்டும்.சில தரமான கலை உள்ளங்களை இன்றைய சூழ்நிலைகளில் "சிந்தனை வட்டம் " இனம் கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு  நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு  நாம் சந்தோசப்படுவதுடன் உதவிக் கரங்களையும்  நீட்ட வேண்டும்.இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் "சிந்தனை வட்டம்"மலையக மண்ணில் பிறந்த மாரிமுத்து சிவக்குமாரின்  மலையகச் சுவடுகள் எனும் கவி நூல் சிந்தனை வட்டத்தின் 204 வது  வெளியீடாக மாரிமுத்து சிவக்குமாரின் முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது.ஆம் மலையக கலை இலக்கிய படைபாளர்களின்  வரிசையில்  அமரர்கள் ,க. ப.லிங்கதாசன் ,குறிஞ்சி தென்னவன்,மற்றும் ஹலிம்தீன் ,பண்ணாமத்து  கவிராயர் போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்கள்.அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவக்குமாரை சேர்க்கலாம்.ஆம் மாரிமுத்து சிவக்குமாரின் கவிதைகளில் சமூக நோக்கும்,இன,மொழி,மத,பேத மற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும் ,சஞ்சிகைகளிலும் ,மலர்களிலும் வெளிவந்த கவிதைகள்  பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன.எமது நாட்டிலும் ,அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத்  தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன.சிவக்குமாரின் கவிதைகளில் முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது.சமூக அவலங்களையும் ,மூடநம்பிக்கைகளையும்  ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப்  போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.கவிஞர் தாம் வாழும்,தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார்.மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார்.மலையகம்  எதிர் காலத்தில் புதுமைகளை ,மாற்றங்களைக் காண வேண்டும்.என்ற தமது  தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.மலையகத்
தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலை பெற்று வந்த போர்,எண்ணிறைந்த உடல் அழிவுகளையும்,உடமை  அழிவுகளையும்,உள அழிவுகளையும், ஏற்படுத்தியது.இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிட வில்லை.என்றைக்கும் 'போர் வேண்டாம்' என்று  தான் மனிதாபிமான  இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன.கவிஞனின் வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.' யுத்தத்தைப் புதைப்போம் ' என்ற கவிதையில்  தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார். கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக் கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள் , மலையகத்து அவலங்கள் பற்றியவையே! மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும் ,தம்மால் ஈர்க்கத்தக்க  அளவிற்குத் துன்பக்  கேணிகளாகவும்  ,அவலங்கள்,சோகங்கள்,சோதனைகள்,வேதனைகள்  முதலியவற்றின்  மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்.
                                                       லயத்துச் சிறைகள் கவிதையில்,
                                                       சிறைகளில் வாழும்
                                                       கைதிகளைப் போல்,
                                                       எங்கள் வாழ்க்கையின்
                                                       உரிமைகளை எல்லாம் -இந்த
                                                       லயச்சிறைக்குள்ளேயே வைத்து
                                                       கவ்வாத்து வெட்டுகின்றனர் !   
     
மனத்துயரம் கவிதையில்  தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்குச் சிலவற்றை காணலாம்.         
                                                        மலைச்சுவடுகளும் கவிதையில்
                                                        உழைப்பின் ஏணிகள்தான்

                                                        எங்களது
                                                        கருவறைகள்
                                                        அந்த ஏணியே
                                                         ஊனமாகும் போது
                                                         எங்கள் உருவங்கள்.
                                                         எப்படி முழுமை பெறும்....?

                                                  
                                                         இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ....?
                                                         எனும் இன்னொரு கவிதையில்,
                                                         வாழ்வதுவோ
                                                         ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
                                                         சாய்வதற்கோ இடமில்லை.
                                                         லயத்துக்குள்ளே....
                                                         வீழும்வரை விதியின்பாதையிலே
                                                         நடந்து செல்ல
                                                         மிரட்டி மிரட்டி
                                                         ஓரங்கட்டபலபேர்.


இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதைகள் துயரத்தை தருகின்றன.
முடிவாக;
                     
ஆழமான ,சமூக பார்வை மிக்க,முழு மனிதயினத்தை  யோசிக்கத் தூண்டும் கருத்துக்களை இவரது அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன். "மலைச் சுவடுகள்" என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன். கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கலையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகிறேன்.
                  

பூ முகத்தில் புன்னகை

 நூல்:பூ முகத்தில் புன்னகை
நூலாய்வு
:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூலாசிரியர்:இன்ஷிராஹ் இக்பால்


"கலையுணர்வு என்பது இறைவனின் மாபெரும்
அருட்கொடைகளில் ஓன்று அந்த வகையில்
இயல்பாகவே கலைகளின் மீதான ஆர்வமும்
ஆற்றலும் கைவரப் பெற்றவர் இந்நூலின்
ஆசிரியையான இன்ஷிராஹ் இக்பால்."

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ  படைப்பாளி இன்ஷிராஹ் இக்பால் அவர்களின் பத்து சிறுகதைகள் தொகுப்பாக" பூ முகத்தில் புன்னகை" எனும் சிறுகதை நூலாக வெளிவந்துள்ளது."சிறுகதைகள் வாசகர் மனதில் இசைவையும் அசைவையும் ஏற்படுத்த வேண்டும்"என்ற ஜெயகாந்தனின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் கதைகள் யாவும் மனதுள் ஊடுருவி நிற்கின்றன.தேர்ந்த ஒரு சிறுகதைப் படைப்பாளியின் கதைகளைப் பார்ப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றது.தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்பதைப் போல் இம் மாணவ படைப்பாளி,தனது ஆசான்களையும் கலையுலகில் மின்னி நிற்கும் தனது தாயாரையும்,இலக்கிய ஆர்வலரும் வெளியீட்டாளருமான அன்புத் தந்தையும் வழிகாட்டலாக ஏற்று பயணித்துள்ளமை மனதுக்கு நிறைவைத் தருகின்றது.அதனால் தான் அவரால் ஒரு காத்திரமான படைப்பைத் தர முடிகின்றது.கதாசிரியை தனது உரையில் கூறியுள்ளது போல தான் கேட்ட,அனுபவித்த,மனதைப் பாதித்த சிறு சிறு சம்பவங்களையே கதைகளாக முன் வைத்துள்ளார்.அனைத்தும் உள்ளத்தை உருக்கும் விதத்தில் தத்ரூபமாகத் தரப்பட்டுள்ளன.தனது கதையோடு வாசகர்களை பதட்டத்துடன்,நெகிழ்வுடன் அழைத்துச் செல்லும் பாங்கில் 'கரு'அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது."பூ முகத்தில் புன்னகை"என்ற கதையில் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படாத ஆகாஷின்  மனநிலையைக் காட்ட கதாசிரியை கையாண்டுள்ள உத்தி உன்னதமானது.ஆகாஷின்  கரடி பொம்மையிடம் மனத்தில் உள்ளதைக் கொட்டும் போது,எமது விழிகள் நீரைக் கொட்டுகின்றன.ஒரு கணம் எமது இதயம் குலுங்கி நிற்கின்றது.புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் செக்கோவின் கதையிலே கதாநாயகன் தன் மனக்குறையை குதிரையிடம் சொல்ல முனைகின்ற காட்சி மனக்கண்களிலே நிழலாடுகின்றது.ஊனமாகிப் போன சிறுவன் ரஸீனை ஒதுக்குகின்ற மனித ஊனங்களின் கோணலை நிமிர்த்த அவனைப் புலமைப் பரிசில் பரீட்சையில் முதற்தர மாணவனாக அரவணைக்கும் கட்டம் சிலிர்க்க வைக்கின்றது.திறமையில் திடமான நம்பிக்கை வைத்து,ஏனையவற்றை மறந்த மபாஸூக்கு மறதியை ஏற்படுத்தி படிப்பினை ஊட்டும் உத்தி அபாரமானது.அதே போல வாசகர்களை ஒரு வகையான மனப்பதட்டத்தோடு,அதீத ஆர்வத்தோடு கடைசிக் கட்டம் வரை நகர்த்திச் செல்கின்ற உத்தி மிக அற்புதம்.'உணர்வுகள் ஊமையாக்கப்பட்ட போது'என்ற கதையில் தான் பாடுகின்ற நிகழ்ச்சியை பார்க்கத் துடிக்கும் பாலாவுடன் சேர்ந்து கதாசிரியை எம்மையும் துடிக்க வைக்கின்றார்.நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் எசமானி அம்மாள் கடைக்கு அனுப்புகின்றாள்.மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.'அடுத்ததாக ஒரு இனிமையான பாடல் இதோ........'என்ற போது பாலாவின் இதயத்தில் மட்டுமல்ல எம் இதயத்துள்ளும் குதிரை ஓட வைக்கின்றார் கதாசிரியை.'தலைக்கணமா............? தன்னம்பிக்கையா...........?'என் ற கதையில் பரீட்சை நேரத்தைத் தவற விட்ட மபாஸ் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறான்.வீடு பூட்டிக் கிடக்கிறது.அடுத்த வீட்டுப் பெண்மணி ஆறுதலாகத் திறக்கும் வரை அவன் நிலை கொள்ளாமல் தவிக்கின்றான்.பரீட்சை மண்டபம் செல்லும் வரை அவனோடு சேர்ந்து எம்மையும் தவிக்க வைக்கிறார் கதாசிரியை.கற்பனை கலக்காத யதார்த்தமான வசனங்கள்.ஒவ்வொரு வாசகனும் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் சிறந்த உத்தி கதாசிரியையின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.உத்திக்குத் தேவையான அளவு,அவசியமான அளவு பாத்திரங்களையே கதையில் புகுத்த வேண்டும்.பாத்திரங்கள் கூடும் போது வாசகர்களுக்கு மயக்க நிலை ஏற்படும்.திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து பாத்திரங்களை மனத்தில் உறுதிப்படுத்தி நிலைப்படுத்த முயற்சிக்கும் சங்கட நிலைமை உருவாகும்.இவ்வாறான நிலைமையை இச் சிறுகதைத் தொகுப்பில் காண முடியாமை சிறப்பு.இச் சிறுகதைத் தொகுப்பில் நல்ல வசனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளமை கதைகளுக்கு மெருகூட்டுகின்றன.திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன.பதச் சோறாக அவற்றுள் சில இதோ...........
                              
                          "அவன் பாடும் போது,தேனில் முக்கிஎடுத்த இனிப்புப் பலகாரத்தை கரும்புடன் சேர்த்துச் சாப்பிடுவது போல இனிக்கும்".
"அவன் பிஞ்சு நெஞ்சம் கற்பனை மஞ்சத்தின் பஞ்சனையில் பென்ச் போட்டு உட்கார்ந்திருந்தது."
"இருதுளிக் கண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து,கன்னங்களின் கால்வாய் வெட்டி கழுத்து வரை நனைத்து காணாமற் போனது."
"தலைப்பிரசவத்திற்கு காத்திருக்கும் தாயின் தவிப்பு அவனது நடத்தைகளில் இழையோடியது."
"குச்சித் துண்டா இருந்தாலும் குருமனலாய் இருந்தாலும் என்னோட பிள்ளை."
"பை நிறைய நிதியும்,மனம் நிறைய சாதியம் என வதியும் வருமானக்காரர்.:
"விரட்டி ஏசும் வித்தையும்,வாடிக்கையாளரிடம் புரட்டிப்பெசும் தந்திரமும்"
"செருப்பு தற்கொலை மூலம் தனது தவணையை முடித்து விட்டிருந்தது.
இவ்வாறு கதாசிரியையின் கவித்துவமான சொல்லாட்சி முழுத்தொகுப்பிலும் விரவிப்பரவிக் கிடக்கின்றன.பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு நேருக்கு நேர் நின்று சவால் விடும் வித்தகமான வசனங்கள்.சிறுகதைகள் என்ற போர்வையில் திண்ணைக் கதைகளைத் தரும் இளம் படைப்பாளிகள் ஊன்றி அவதானிக்க வேண்டிய மொழிநடை,இச் சிறுகதைத் தொகுப்பை எழுதத் துடிக்கும் மாநாவப் படைப்பாளிகள் பயிற்சி நூலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதென்பது என் மேலான சிபாரிசு.தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் 'மஹதி'பின்வருமாறு கூறுகின்றார்."சிறந்த வசனங்கள் கதை மாளிகைக்குப் பூசப்படும் பெயின்ட்,வர்ணங்களை எங்கெங்கே எப்படிப் பூச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே போல கதை சுவையாகத் தொடர வேண்டும்.அதிசயிக்கத் தக்க திருப்பத்துடன் முடிவடைய வேண்டும்.கதையைப் படித்து முடிந்த பின்பு நல்ல கதையைப் படித்தோம் என்ற திருப்தி ஏற்பட வேண்டும்"என்கிறார்.இன்ஷிராஹ் இக்பால் தனது கன்னிப் படைப்பின் மூலம் மஹதியின் கருத்தை நிறைவேற்றியுள்ளார். இன்ஷிராஹ் என்ற இலக்கிய இளம் தளிர் விருட்சமாய் வளர்ந்து மிளிர வாழ்த்துக்கள்.

இந்த நூலின் விலை"150 /=
தொடர்புகளுக்கு:எக்மி பதிப்பகம்
                                19 .கமன்தெனிய வீதி,
                                 கிருங்கதெனிய மாவனல்லை.
                                  இலங்கை .
                                  தொலைபேசி:035 - 2246494
                         gmail:acmipublication@gmail.com

திங்கள், 4 ஜூலை, 2011

நூலாய்வு...

நூல் :உன்னை நினைப்பதற்கு
தொகுப்பாசிரியர்: மருதூர் ஏ.எல். அன்ஸார்நூல் ஆய்வு : கலைமகள் ஹிதாயா றிஸ்வி

தென்கிழக்கு பிரதேசத்தின் கவிதைத் தொகுப்பு "உன்னை நினைப்பதற்கு"
இன்றைய நவீன உலகில் தகவல் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி
நாளுக்கு நாள் அதிகரித்து முழு உலகையும் வினாடிப் பொழுதில் கண்டுகொள்கின்ற
 எமது சமூகத்தின் மத்தியிலிருந்து இவ்வாறான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி
 அவர்களின் படைப்புக்களை தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில்
தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருதூர் ஏ.எல் அன்ஸார் அவர்களைப் பாராட்டுகின்றேன். எழுத்தாளர்களின் பேனா முனைகள் அம்புபோல் பாயும் என்பார்கள் அதனை ஒத்ததாக
 தாங்கள் கவிதையுடன் மட்டும் நின்று விடாமல் எமது சமூகத்தின் கல்வி,கலாச்சார,
சமூக,பிரதேச ஒற்றுமை.இதர அபிவிருத்திகள் போன்றவற்றினையும் தங்களுடைய பேனா
 முனைகள் ஊடாக வெளிக் கொண்டுவரவேண்டும்.உன்னை நினைப்பதற்கு தொகுதியில்
மொத்தம் 27 கவிஞர்களின் கவிதைகள் இத்  தொகுதியில் இடம்பெற்றுள்ளன.அவர்கள்,
கவிஞர்.மருதூர் ஏ.எல் அன்ஸார்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,கவிஞர்.யூ.எல்.எம்.பைஸர்
,
கவிஞர்.முகம்மது நவாஸ் (ஸிஹாப்),கவிதாயினி சுல்பிகா ஷெரீப்,கவிஞர்.எம்.ஐ.எம்.முஜீப்,
கவிதாயினி மாஹிரா முஜீப்,கவிஞர்.சம்சுதீன் ஜனூஸ்,கவிதாயினி சப்னா அமீன்,
கவிதாயினி தர்பா பானு,கவிஞர்.ஏ.எல்.ஜாபீர்,கவிதாயினி சுஹைதா  ஏ.கரீம்,
கவிதாயினி பாயிஸா  அலி,கவிஞர் வதுறுதீன் முகம்மத் றியாத்,
கவிஞர் கே.எம்.முகம்மத் சித்தீக்,கவிஞர். ஐ. முஹைதீன்,கவிதாயினி
 அமானுள்ளா சுஜானா,கவிதாயினி எம்.எம்.எஸ்.பஸினா,கவிதாயினி எம்.எச்,ஜிப்ரியா
,கவிதாயினி தங்கராசா மெரீனா,கவிதாயினி மர்சூகா ஜெமீல்,கவிதாயினி ந.பவதாரினி,
கவிதாயினி றிஸ்வியா தாஹிர்,கவிஞர்.சமீம் முஹம்மட் சனீம்,
கவிதாயினி றிம்ஷா முஹம்மட்,கவிதாயினி எச்.எப் றிஸ்னா,
கவிஞர்.ரபீக் மொஹிடீன் இந்த கவிஞர்களுள் பலரது கவிதைகள்
வளரக்கூடிய தன்மை விளங்குகிறது.சில வளர்ந்த கவிஞர்களினதும்
கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுள்,
  சுஹைதா ஏ.கரீமின் கவிதை
வாக்குக் கேட்டு வாஞ்சையுடன்
வாசல் வரை வருகிறார்
வார்த்தையாகவே ஜாலம் காட்டி
வாக்குப் போட கெஞ்சுகிறார்...வெற்றி பெற்றால்
வெட்டிப் பேச்சு போலவே
வாக்கு மாறி,வந்தவரை
வேங்கையாகப் பாய்கிறார்..

கலைமகள் ஹிதாயா றிஸ்வியின்  வரிகள்...
கூடிய விரைவில்
வாழ்க்கையின் சோதனைகளையும்
வேதனைகளையும்..
துயரங்களையும்..
துன்பங்களையும்..
கஷ்டங்களையும்..
நஷ்டங்களையும்..
ஒன்றாக மூட்டை கட்டி
சவமாய் சடலமாய
வீசப் போகிறேன்அப்போது
உயிர் இருந்தும் உணர்வுகளற்ற
என் வாழ்க்கைக்கு..
கல்லறையும் கிடையாது
சமாதியும் கிடையாது
கப்றும் கிடையாது....

 எஸ்.ஜனூஸின் வரிகள்..
கறிச் சட்டிக்குள்
சோறு பிசைந்து சாப்பிட்டால்..
மீசை முளைக்காதென்று..
எனது உம்மம்மா சொன்ன..
ஐதீகமொன்றை....இன்றுகளில்
நினைத்துப்பார்க்கின்றேன்....
 பாலை வனம் ஏங்கும்
மழைத் துளியாய்...
மீசைக்காய் ஆசைப்பட்ட..
அந்த இனிய நாட்களை..
அசை போடுகிறது..
எனதான மனசு....

வதுறுதீன் முகம்மத் றியாத்
மனித ஜீவன்களிலிருந்து
வாய் பேசா மிருகங்கள் வரை
ஏன் மரம் செடி கொடி வரை
மரணம் எப்பவும் வரலாம்!
எப்படியும் வரலாம்!!
ஓர் பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவது
நோயோடு போராடித் துடிக்கும்
உயிரைவிட மேலானது! அவசியமானது!!

கிண்ணியா பாயிஷா அலி
அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களோடே
மெல்லமாய் உணர்கிறேன்..................
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உமம்மாக்கள்தான் பாக்கியவாதிகள்

வெலிகம  றிம்ஸா முஹம்மட்
புரிதல்களின்மையின் ஏக்கத்தோடு
மருண்டு போகிறது
என் இதயப் பார்வை

கணத்துக்குகணம்
பணம் பார்த்து
குணம் மாறும்
மானிடர் கண்டு சுருக்கிக் கொள்கிறது
அது தன் சிறகை

வேகமாக மிக வேகமாக
கடந்து செல்லும்
மனிதர்களின் முகம் பார்த்து
துயரங்கள்
மீள்சுழற்சியாகின்றன..........

இவ்வாறு பல கவிதைகள் இத் தொகுதியில் பல தலைப்புக்களில்
 இடம்பெற்றுள்ளன.இக் கவிஞர்கள் உடல் அயர்ந்தாலும் மனம்
தளராத கவிப்பூக்களை தொடர்ந்தும் தர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இத் தொகுப்பாசிரியர் அன்ஸாரின் இந்த முயற்சிக்கு என் இத பூர்வமான நல்லாசிகள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நாளையும் வரும் கவிதைத் தொகுதி!!

இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து,உயர்  பக்குவத்தின் பாதையில் பயணத்தை மேற்கொள்வதற்கு அமைத்துக் கொடுக்கும் ஓர் ஊடகமாக 'நெகிழி'வெளியீடுகள் அமைகின்றன.சிரமமான பணியொன்றைச் செய்வதற்குத் துணிந்து விட்ட நெகிழி  வெளியீட்டாளர்களை நாம் பாராட்டாதிருக்க முடியாது.மருதூர் இலக்கிய வானில் மின்னும் கவி தாரகைகளின் ஒன்றான கலைமகள் ஹிதாயா மஜீத் (தடாகம் ஆசிரியை) அவர்களின் கவிதைத் தொகுதி நெகிழி வெளியீடாக நம்மத்தியில் வெளிவந்துள்ளது.

தனது சிறு தொகுப்பும் முதல் தொகுதியும் என்று கூறிக் கொள்ளும் இந்த இளம் படைப்பாளியிடம் குருவை மதிக்கும் உயர் பக்குவத்தைக் காண முடிகிறது.தனது இலக்கியப் பயணத்தின் வழிகாட்டியாக இருந்த அஸ்ரபா நூர்தினை மறக்காது நினைவில் வைத்திருந்தது மட்டுமல்லாது தனது முதல் பிரசவத்தையே வழிகாட்டிக்கு  அர்ப்பணித்துவிட்ட பாங்கு  உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயமென்று துணிந்து கூறலாம்.இதிலிருந்து இப் படைப்பாளி மிகவும் தன்னடக்கம் உள்ளவர் என்பதை இனம் கண்டு கொள்ளலாம்.இரு வரிவசன முறிவுகள் பத்திரிகையில்  வந்து விட்டாலே தலைகால் புரியாது பெருமைக் கொண்டு திரியும் பலரைப் பார்க்கும்  இக் கால கட்டத்தில் இப்படியும்  ஒரு பெண் அதுவும் வழிகாட்டியை மதித்து அவருக்கே அர்ப்பணித்துவிடும் உயர் பக்குவம் கொண்ட கலை மகள் நிச்சயம் வளரும் படிகளில் தடம்  பதிக்கும் சாத்தியம் உண்டெனலாம்.

புதுக் கவிதை யுகத்தில் வரிசைப் படுத்த வேண்டியோர் எண்ணிக்கையற்றுக்கிடப்பினும் முஸ்லிம் பெண் கவிஞர்களை விரல் விட்டு என்னலாம்.அந்த எண்ணிக்கையாளர்களில் தற்சமயம் புதுக்கவிதை, மரபுக் கவிதைகளை அள்ளிக் கொணரும் கலைமகள்  ஹிதாயா இளையவர்கள் மத்தியில் வரவேற்கப்பட வேண்டியவர். கிழக்கு மண்ணில் ஒரு நெருக்கடிமிக்க காலகட்டத்திலும் ஒரு தொகுதி  வெளியிட்ட கலை மகள் ஹிதாயாவை நிச்சயமாக பாராட்டாமல் இருக்க முடியாது. கவிதைகள் சமூகக் குறைகளைச் சுடுகின்றன.சீதனச் சிக்கல்களை தத்ரூபமாய் காட்டயுள்ளார் கவிஞர்.

"புதிய சமுதாயம்"எனும் கவிதை புரட்சிக் கருத்து என்னைக் கவர்ந்த வரிகள் இதிலுண்டு.அது"தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கைகளை வெட்டி எரியாமல்...கட்டிக் காத்து...நாளையாவது புது சமூகம் பிறக்காதா..?"ஆமாம் கவிதையிலே நியாயமான ஏக்கமுண்டு.நவீன புதல்விகள் கவிதை பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அருமையான கவிதை.கூடவே 'வேண்டுதல்' 'இதயக் குரல்' போன்ற கவிதைகளும் பெண்களுக்காகவே எழுதப்பட்டுள்ளன.
 மலையகத்தையும் தோட்டதொழிலான மக்களையும் இரு  கவிதைகளில்  படம் பிடித்துக்காட்டுவதை மனமகிழ்ச்சியோடு பார்க்கக் கூடியதாக உள்ளது.அக்கவிதைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.யதார்த்தங்களை சிறிய வசனங்களில் தனக்கேயுரிய எளிய பாணியில் இவரது அனைத்து கவிகளும் வாசகர்களைக் கவரக் கூடியதாக திகழ்கின்றன.கலைமகளின் கவி உள்ளத்தின் ஊடுருவல் மலையகத்தை மட்டும் மல்ல இந்த மண் முழுவதையும் சுற்ற வேண்டும்.தேயிலைச் செடிகளுக்குப் புதிய விளக்கம் நன்று,பாராட்டுக்கள்.
"துண்டிக்கப்பட்ட மின்சாரம்" நல்ல கவிதை.நன்றாக எழுதப்பட்டுள்ளது.முடிவு சூப்பர்...'காரணம்' கவி அஷ்ரபாவுக்கு எழுதபட்டதோ.....? 'நாளையும் வரும்' மகத்தான தலைப்பு.....'ஆமாம்....போடிப்பார் கூட நாளைக்குப் புல்லாகிப் போவார்.நன்றாகவேயுள்ளது கவிதைத் துளிகள்."இதயக்குமுறல்"  கவியில் 'பெண் இதயங்கள் மறுமையிலாவது சிரிக்குமா?' என்ற வரிகள் ஆழமானவை.உணர்ச்சியுள்ளவை 'பாட்டாளி வாழ்க்கை' "அப்போது தான் இந்த தேயிலை வாச மனதுகள் செழிக்கும்....தரமான வரிகள்.கவிக்கு நல்ல மெருகூட்டல்கள்..'ஆண்கள் என்ற இவர் கவிதையில் ஆண்மை என்ற சொல்லுக்கு இலக்கணம் தொலைத்த பாண்டவர்கள்.என்ற வரிகளில் ஆணினத்தை மிகவும் சாடியுள்ளார்.ஆணினத்தை முற்றிலுமே சாடிவிட்டோம் என்ற ஒரு உணர்வினாலோ அன்றி உண்மையான ஒரு கருத்தோ ஒன்று 'அண்ணா' என்றே கவிதையில் புகுந்து நிலைமையை ஓரளவு சமப்படுத்துகிறது."கலைமகளும் கவிதைகளும்"இப்னுவின் கருத்து நன்று...

கலைமகள் ஹிதாயா மரவுக்கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கதும் மிக மிக மகிழ்ச்சிக்குரியதுமாகும்.இன்னும் பல  தொகுதிகளை இவர் மூலமாக எதிர்பார்க்கின்றோம்.இன்னும் இமயமளவு புகழ் பெற வாழ்த்துவதோடு,இவ்விளம் பெண்ணின் ஆர்வத்துக்கு எனது நல்லாசிகளும் பாராட்டுக்களும்...
                                                            டாக்டர்.சாந்தி கஜந்திரா
                                                              உரும்புறாய்

சனி, 8 ஜனவரி, 2011

இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை - நூலகவியலாளர் என்.செல்வராஜா

இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில்“இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.

பாடப்புத்தகங்களையும், பாடஉசாத்துணை நூல்களையும் வெளியிட்டு வரும் சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடாக வெளிவந்துள்ள இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற நூலை பார்ப்போம்.
கிழக்குமாகாணத்தின் கல்முனை – சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகக் கொண்ட கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும், தென் மாகாணத்தில் காலி – கட்டுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஸீதா புன்னியாமீன் அவர்களும் இணைந்து எழுதியுள்ள இக்கவிதைத்தொகுப்பில் சுமார் 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரு கவிஞர்களும் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் வழியாக இலக்கிய உலகில் நன்கு பரிச்சியமானவர்கள். பல நூல்களைத் தத்தம்பெயரில்  வெளியிட்டவர்கள்.

உடத்தலவின்ன மடிகேயிலுள்ள சிந்தனை வட்டம்,  இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் 1வது பதிப்பினை ஏப்ரல் 2000இல் வெளியிட்டுள்ளது. 154 பக்கங்கள்,  மற்றும் சித்திரங்கள், கொண்ட இந்நூலின் விலை: ரூபா 100. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கவிதை நூலில் அவதானித்த ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால்,  இதில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் எவை கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் படைப்புக்கள் எவை மஸீதா புன்னியாமீன் அவர்களின் படைப்புக்கள் என்று வேறுபடுத்திக்கண்டறியமுடியாமல் உள்ளதாகும். மீண்டும் நூலின் தலைப்பினை வாசித்தேன். இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற பெயர் இதற்காகத்தான் தரப்பட்டுள்ளதோ என்று கருதுகின்றேன்.

இலங்கையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் விரல்விட்டெண்ணக் கூடியனவாகவே உள்ளன. இளம் வயதில் சில பெண் எழுத்தாளர்கள் வேகத்துடன் பத்திரிகைகளில் கவிதைகளைப் படைத்திருந்த போதிலும்ää காலப்போக்கில் அத்துறையைக் கைவிட்டவர்களாகவே பெரும்பாலான முஸ்லீம் பெண் எழுத்தாளர்கள் காணப்படுகின்றார்கள். 1980க்கு முன்னைய காலங்களோடு ஒப்பிடும் போது, 80களுக்குப் பின் இந்தப்போக்கில் பாரிய மாற்றம் காணப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. 80களுக்குப் பின்னர் வளர்ச்சிகண்ட பெண் எழுத்தாளர்களில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும்.  மஸீதா புன்னியாமீன் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை நூலில் இடம்பெற்றுள்ள 59 கவிதைகளும் புதுக்கவிதை சார்ந்தவை. பல கவிதைகள் கருத்தாழம் மிக்கவை. சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியவை. அரசியல்பொருளாதாரம், கல்வி, சமயம்,  காதல் எனப் பல பக்கங்களையும் தொட்டுச் செல்பவையாக அவை அமைகின்றன. இரு பெண் கவிஞர்களின் படைப்புக்களைக் கொண்ட நூல் என்றவகையில் இயல்பாகவே இங்கு பெண்கள் தொடர்பான விடயங்களைக் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் பிரச்சினைகளை இனங் காட்டுபவையாகவும்,  பெண்களின் விழிப்புணர்வைத் தூண்டுவனவாகவும் அவை அமைந்துள்ளன. அதையடுத்து நாட்டின் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட கவிதைகள் விளங்குகின்றன. இத்தகைய கவிதைகளில் சுமார் 10 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. நஷ்டஈடு,  பிறந்த மண், என் தேசமிது,  கூவி அழைக்கும் காகம்,  துளிர்விட்ட தேசம் போன்றவை இத்தகைய கவிதைகளில் சிலவாகும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவ்வொரு கவிதையும் பொருத்தமான ஓவியங்களுடன்; பக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலில் சிந்தனைவட்டம் கடந்துவந்த பாதச்சுவடுகளை மீண்டும் நினைவுகூரும்வகையில் அதன் ஸ்தாபகர் பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் எழுதிய “சிந்தனைவட்டமும் நானும்” என்ற ஆவணப்பதிவினை முதலாம் பாகமாகவும்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  மஸீதா புன்னியாமீன் இருவரும் இணைந்தெழுதிய கவிதைத்தொகுதியை இரண்டாம் பாகமாகவும் கொண்டு வெளிவந்துள்ள இந்நூல் சிந்தனைவட்டத்தின் 100வது வெளியீடாகும். 100வது நூல் வெளியீடுவரை சிந்தனை வட்டம் வெளியிட்ட முழு நூல்விபரப்பட்டியலும் இந்நூலில் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.

“சிந்தனை வட்டமும் நானும்” என்ற முதலாம் பாகத்தில் தமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் புன்னியாமீன் அலசியுள்ளார். பாடசாலை வாழ்வின்போது தன்னிடம் மறைந்து காணப்பட்ட எழுத்துத் திறனைத் தனக்கு இனம்காட்டிய ஐ.ஹாஜிதீன்,  யோ.பெனடிக்ட் பாலன் ஆகியோரை இதில் நன்றியுடன் நினைவு கூருகின்றார். தன் 19வது வயதில் “தேவைகள்” என்ற தனது முதலாவது சிறுகதைத்தொகுதி வெளிவந்தமையை பெருமையுடன்ää எழுத்தாளனுக்குரிய இயல்பான மகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு, நவம்பர் மாதம் 2000ஆம் ஆண்டு கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும்,  சிந்தனை வட்டமும் இணைந்து இந்நூலை வெளியிட்டு வைத்திருந்தன. இந்த வெளியீட்டுவிழா நிகழ்வின் பதிவாக அன்றைய நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த மற்றொரு நூல் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்.

அல்ஹாஜ் M.R.M.. ரிஸ்வி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த சுவடு என்ற நூலே அதுவாகும். உடத்தலவின்னை சிந்தனை வட்டம் வெளியிட்டுவைத்துள்ள 115வது நூலாக சுவடு என்ற இந்நூல் அமைந்துள்ளது. இதன் 1வது பதிப்பு ஜனவரி 2001இல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுகஸ்தொட்ட J.J.Printers  அச்சிட்டுள்ள இந்நூல் 148 பக்கம் கொண்டதாகவும்,  ஏராளமான புகைப்பட ஆவணங்களைக் கொண்டதாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் ஒரு புதிய பரிமாணத்தின் சுவடு இதுவாகும் என்று நாம் கூறலாம். ஏனெனில்,  ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளையே ஆவணமாக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி இதுவாகும். 11.11.2000 அன்று கண்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னணியில் நூல்வெளியீடு மாத்திரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் தமிழ் வளர்க்கும் காவலர்களை கொரவித்தல்,  ஏற்கெனவே ஒழுங்குசெய்யப்பட்ட தடாகம் சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய பல இலக்கிய நிகழ்வுகளும் அன்று இடம்பெற்றுள்ளன. இந்த இலக்கிய நிகழ்வில் கௌரவம் பெற்ற ஐவர் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா,  பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம்ää சுயாதீன தொலைக்காட்சிப் பணிப்பாளர்சபை உறுப்பினரான புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர்,  பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளரும் வெளியீட்டாளருமான திரு ஸ்ரீதர்சிங்,  பன்னூலாசிரியரும் கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரே இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள். இவை அனைத்தும் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஆவணத்தொகுப்பாக இந்நூலின் முதலாம் பகுதி அமைந்துள்ளது.

தேன் மலர்கள் கவிதைத் தொகுதி பற்றி கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம் அவர்கள்......

மீன்பாடும் தேன் நாடு கிழக்கிலங்கை
கலைகளின் பிறப்பிடம் ,கவிகளின் இருப்பிடம்,
கலைமகளும், அலைமகளும் காவியம் துய்த்திடும்
கவின் சோலை. அவ்வண்ணச் சோலையில் பூத்து
மனம் பரப்பும் மலர்கள் ஏராளம்! ஹிதாயா றிஸ்வியின்
"தேன் மலர்கள்"இன்று ஒரு கன்னி வெளியீடு!

உள்ளத்துறைத்து,நெஞ்சில் ஊற்றெடுக்கும்
கவிதை,தெள்ளத் தெளிந்த தமிழில் வெள்ளமென
வெளிவரும்,மீனாட்சி  சுந்தரனார் கூற்றுப்போல்,
வெறும் மாதுளம் பழக் கவிதைகளாக இல்லாமல்,
மாதுளையை உடைத்து ஒவ்வொரு தோலாக
நீக்க மணிகள் வெளிவருதல் போல கவிதைகளில்
பொருளாழம் தெரிதல் வேண்டும்.

"சான்றோர் கவியெனக் கிடந்த
கோதாவரியினை வீரர் கண்டார்" என்கிறான்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்,மேற்பார்வையில்
ஆழம் தெரியாமலும்,உண்மையில் மிக்க
ஆழமானதுமான நதியை,சான்றோர் கவிக்கு
உவமை கூறினார்.

கணக்கில் குறித்த இலக்கம் பிசகாமல்
இணைக்கப்படுதல்,அதைப்போல,இசைத்துத்
தெளிவாக மினுக்கி, வகிர்த்து ,உணர்ச்சிப்
பெருக்கில் நனைந்து பி...ழி...ந்து கவியாகும்.

"பெருகிய உணர்வின் இறுகிய சிறைப்பிடிப்பே கவிதை
'உள்ளத்துள்ளது கவிதை,நெஞ்சில்
ஊற்றெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில்
நன்றாய்ச் செப்பிடல் கவிதை'"சுவை புதிது"
பொருள் புதிது,வளம் புதிது,சொற்புதிது,"சோதிமிக்க
நவகவிதை"எனப்பலவாறு கூறப்படும்.

மரபு வழி இலக்கியம் படைத்தல் என்றும்,
மரபும்,இலக்கணமும் கவிஞனைக் கட்டுப் படுத்தா
தென்றும் கருத்துக்கள் உள்ளன. எனினும் ஒரு
மொழிக்குள்ள கவிமரபே அதன் தனித்துவம்.அதனை
விடின் கவிதையின் கவர்ச்சிகுன்றும்.

கவிதைக்குத் தனிவடிவம் உண்டு.அதன்
உருவம் ஓசையில் (Rythm)அமையும்
ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ஓசை
அமைதி உண்டு.பாட்டுப் பாடத் தெரிந்தோர்
யாவரும் கவிஞர்கள் இல்லை.ஆனால் கவிஞர்கள்
பாட்டுப் பாடத் தெரிந்தவரே.

கவிதை அதன் பொருட் சிறப்பால்
உயர்வு பெறும். அதனைச் சொல்லும் பாணியும்
அழகாயிருத்தல் வேண்டும். பழம் பாடல்களும்
ஓசைகளை அறிவுறுத்தும். ஒரு மாத்திரை தப்பின்
ஓசை கெடும்.

கவிதையில் யாப்பிலக்கணங்கள், எதுகை,
மோனை,அழகு அமைந்துள்ள சிறப்பை உணர்ந்து
இன்புறலாம்,ராகலட்சணம் தெரிந்தவர்
சங்கீதத்தை அனுபவிப்பது போல்,சிறந்த கருத்தும்
வடிவமும் பெற்ற பின்னரே அனுபவிக்க முடியும் .

அவ்வடிவம்"கலை"எனப்படும். கவிதையும்
ஒரு கலை.தன்னைப் படைத்தவன்(கவிஞன்)
தன்னுள் போதித்த உணர்ச்சிகளை மற்றவருக்கு
வழங்குதலே அதன் தொழில்.

சொற்கள் எங்கு தமக்கே உரிய பொருட்
செறிவு,எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தி கொண்
டுள்ளனவோ, அங்கே கவிதைகளைக் காணலாம்
என்பர்.

இவ்வாறான அழகுத்  தோற்றங்களை இப்
பெண்ணின் கன்னி முயற்சியில் செறிவாகக் காணலாம்.
விரிவஞ்சி உதாரணத்திற்குச் சிலவற்றைக் காணலாம்.
குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்...
உதிரம் தன்னை தேயிலைக்கே-நல்ல
உரமாய் இட்டு வளர்ந்தனராம்
 மதுரமான தேனீரும் -அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்துவாம்.

 நல்லோர்க்கே சொர்க்கம்..
பெண்ணே வாழ்வின் கண்ணாகும்-அவள்
பெருமையின் அளவோ விண்ணாகும்.
இன்னல் தன்னை அவர்க் கூட்டல்-உயர்
இஸ்லாத்திற்கு முரணாகும்.
 நாங்கள் 
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும்?உயிரைத்தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு!

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்தது நாம் உலவல் எல்லாம்
இனியுந்தான் மாறிடவே வழிகள் காண்போம்.

 கல்வித் தாய் அருள வேண்டும்..
ஏற்றமுடனும் நான் செயும் பணியை சிலவோர்
இயலாமையால் இகழும் நிலையைக் கண்டேன்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்திடவும் சுடரைத்தாவேன்.
.

 ஒரு ஒற்றைக் குயிலின் ஓலம்.
சோலையிலே ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலில் கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் அது
வாடி மனம் வெந்து கூவுதடி.

விளையாட்டுக் கலை வளர்ப்போம்,அன்னை,
கேவலம் வேண்டாம்,தாய்த் தமிழே  வாழி
...இப்படி
பல கவிதைகள் சிறப்புற்று  விளங்கி இழையோடுகின்றன.

"திறமையான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்"என்று
பாரதி கூறியதற்கமைய, மற்றவரும் போற்றும்
வண்ணம்"கலைமகள் ஹிதாயா றிஸ்வி"இன்னும்
பல கவிதை வடிவங்களைப் படைக்க வேண்டும்.
இப்பெண்ணின் முயற்ச்சிக்கு தமிழ் கூறும்
நல்லுலகம் நல்லாதரவு தர
வேண்டி வாழ்த்துகின்றேன்.

மேலும் பல செல்வங்களுடன்
கவிதைச் செல்வங்களையும்,அதிகம்,அதிகம்
பெற்று தமிழன்னைக்கு ஈதல் வேண்டும்.
நீண்ட வாழ்வும்,நிறை சுகமும்
"கலைமகள்  ஹிதாயா றிஸ்வி"பெற்றின்புற
அருட் பெருங் கடலான அல்லாஹ்வைப்
பிராத்திக்கின்றேன்.