சனி, 16 ஜூலை, 2011

நூலாய்வு

நூல்: விடியலின் விழுதுகள்
நூலாய்வு:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூல் ஆசிரியை:ஸக்கிய்யா சித்தீக் பரீத்


மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வாழ்விடமாகவும் கொண்ட இந்த நூல் ஆசிரியை ஸக்கிய்யா பரீத்.கொழும்பு  ஸாஹிராக்  கல்லூரியின் ஆசியைகளில் ஒருவர். இவர் தமிழறிவும் ,ஆற்றலும்   ,கற்பிக்கும் திறனும் ,ஆளுமையும் கொண்டவர்.அறிஞர் ஏ.எம்.ஏ அசீஸ் கலாநிதிக்குப் பிறகு ஸாஹிராவில் இறுதியாக நடை பெற்ற முத்தமிழ் விழாவின் போது ஸக்கியாவின்  வகிபாகம் மகத்தானது.அவ்விழாவில் வைத்தே தனது  முதலாவது நூலான "ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் "என்ற நூலைப் பிரசவித்தார்.திருமதி ஸக்கியாவின் ஆசிரியர் வாண்மையும் நல்லொழுக்கப் பண்பாட்டு  விழுமியங்களும் ஒரு புறமிருக்க அவரது எழுத்து வாண்மையைப் பற்றியும் சற்று அலச வேண்டியிருக்கிறது.பொதுவாகவே ஓர் ஆசிரியராயிருப்பவருக்கு சரளமாய் எழுதவும்,பேசவும் இயலும் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை தான்.ஆனால் அவர்கள் அனைவராலும் மிகச் சிறப்பான முறையில் கதை,கட்டுரை,கவிதைகள் வடிக்க முடியுமா? என்பது ஐயத்துக்குறியதே  .ஆனால் எமது தாய்த் திரு நாட்டைப் பொறுத்த அளவில் மிகச் சிறந்த இலக்கியவாதிகளும்,எழுத்தாளர்களு
ம் ஆசிரியர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்,இருந்தும் வருகின்றனர்.இவர் திருப்பம்,மங்கா வடு,காலத்தின் கோலம்,கண்ணீர் எழுப்பிகள்,இறைத் தீர்ப்பு,திசை மாறிய பறவை,நிரபராதிகள்,கோக்கி யார்?,மின்னும் தாரகை,இணங்கிப் போ மகளே!,இழவு காத்த கிளி,முக்காட்டினுள் மாமி,நியதி போன்ற பதின்மூன்று தலைப்புக்களில் இவரது சிறுகதைகள் விடியலின் விடிவுகள் நூலாக தோன்றியது.சுப்ரமணிய பாரதி கூட,தனது பா,கவிதை வடிவங்களோடு உரைநடையில் காத்திரமான கட்டுரைகளை படைத்தளித்த தோடு சமூக நீதியைப் போதிக்கும் சிறுகதைகளையும் எழுதினார்."சிறுகதை மன்னன்"என்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றிப் புகழப்படும் புதுமைப்பித்தன் போலவே இலங்கையிலும் பல புகழ்மிக்க சிறுகதை ஆசிரியர்கள் தோன்றினார்.புதுமைப்பித்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.அவரினால் ஈர்க்கப்பட்டு அவரின் அருட்டுணர்வில் யதார்த்த பூர்வமான சிறுகதைகள் வடித்தவர்தான் இலங்கையின் கிழக்கு மண்ணைச் சேர்ந்த "பித்தான் ஷா"என்பவர்.கே.எம்.ஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர் புதுமைப்பித்தன் மீது கொண்ட அபிமானத்தால் தந்து பெயரைப் "பித்தன் ஷா"என்றே மாற்றியமைத்துக் கொண்டார்.இவரது சிறுகதை சர்வதேசத்தரம் வைத்ததாகும்.இவரை நிகர்ந்த பல சிறுகதை ஆசிரியர்கள் எமது நாட்டிலும் தொன்றியுருக்கின்ற்றனர் அவர்களுள் இலங்கையர்கோன்,மூ.தளையசிங்கம்,தாழையடி சபாரித்தனம்,டொமினிக் ஜீவா,கே.டானியல்,தெளிவத்தை ஜோசப்,செ.யோகநாதன்,மருதூர்க் கொத்தன்,அ.ஸ.அப்துஸ் ஸமது,பீ .எம்.புன்னியாமீன்  போன்றோர் (பட்டியில் நீண்டது) குறிப்பிடத்தக்கவர்கள்.காலச்சுழற்சியில் பலர் மறைந்து போகச் சிலரே எஞ்சி நிற்கின்றனர் புதியவர்கள் சிலரும் முனைப்புடன் சிறுகதைகள் படைத்தளிக்கின்றனர்.புதியவர்களில் எஸ்.எல்.எம்.மன்சூர்,ராஞ்ச குமார்,திக்குவல்லை கமால் (இன்னும் பலர்)போன்றோரைக் கோடிட்டுக் காட்டலாம்.எமது பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அதுவும் முஸ்லிம் பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் சிறுகதை படைத்தளிப்போர் எம்மத்தியில் மிகக் குறைவு என்று தான் கூறவேண்டியுள்ளது.எமது பெண் படைப்பாளிகள் அதிகமாகம் கவிதைகளையே எழுதிவருகின்றனர்.சிறுகதைகள் அல்லது நாவல் என்று வரும் போது வெகுசிலரே எம் மனக்கண்முன் நிற்கின்றனர்.ஒரு நயீமா சித்தீக்கும் ஒரு சுலைமா ஏ ஸமீயும்,ஒரு கெக்கிராவை ஸஹானாவும் ஒரு மஸீதா புன்னியாமீனும்  ஒரு புர்கான் பீ இப்திகாருமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நான் குறிப்பிடும் இவர்கள் அனைவரும் சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.கலைமகள் ஹிதாயா றிஸ்வி,எம்.ஏ. ரஹீமா,சம்மாந்துறை மசூரா, சித்தி ரிஜா,காத்தான்குடி நஸீலா,ஜரீனா முஸ்தபா,ஜெனீரா அமான்,பௌசியா நூர்தீன்,சர்மிளா ஸைத் போன்ற  சில நல்ல சிறுகதை ஆசிரியைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரகாசித்தாலும் இன்னும் இவர்கள் இலைமறை காய்கள் என்றே கூறவேண்டியுள்ளது.திருமதி ஸக்கியா சித்தீக்,ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்.தமிழ் மொழியை நன்கு கற்றவர் உண்மையில் எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.சிறுகதை எழுதும் ஆற்றலும் ஆளுமையும் கற்பனை வளமும் கதை கூறும் பாங்கும் வைக்கப் பெற்ற இவர் ஏன் இது கால வரை பத்திரிகைகளுக்கு எழுதாமல் இருந்தார் என்பது தான்.ஆனால் இத்தொகுப்பின் மூலம் இவரது மேதாவிலாசம் நாடெங்கும் துலாம்பரமாகத்தான் போகிறது.அன்றாட நடைமுறைகளை யதார்த்த பூர்வமாகச் சொல்கிறார்.தனிமனித அவலங்கள்,சமூக நெறிமுறைகள்,மனித நேயமும் அதற்கெதிரான நடத்தைகளும்,கழிவிரக்கம் போன்ற கருத்தியல்கள் இவரது கதைகளில் விரவிக்கிடக்கின்றன.உதாரணமாக திசைமாறிய பறவை,இணங்கிப் போ மகளே,கோக்கி யார்? போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை."காலத்தின் கோலம்"என்ற சிறுகதை நகைச்சுவைரசம் சொட்ட எழுதிப்பட்டுள்ளது.சிறிய சிறிய பந்திகளாக "விறு விறு"என்று கதை சொல்லப்படுவதனால் வாசகர்களது மனதில் ஓர் ஆவலைத்தூண்டி முழுக்கதையும் ஒரே மூச்சில் வாசித்து விடவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் கதாசிரியை வெற்றிகொண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.திருமதி ஸக்கியா சித்தீக்கின் கதை சொல்லும் ஆற்றல் மேலும் விரிவடைந்து இன்னும் சில சிறந்த தொகுதிகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இத் தொகுப்பின் வெற்றிக்கு எனது ஆசிகளை வழங்குகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக