வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நாளையும் வரும் கவிதைத் தொகுதி!!

இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து,உயர்  பக்குவத்தின் பாதையில் பயணத்தை மேற்கொள்வதற்கு அமைத்துக் கொடுக்கும் ஓர் ஊடகமாக 'நெகிழி'வெளியீடுகள் அமைகின்றன.சிரமமான பணியொன்றைச் செய்வதற்குத் துணிந்து விட்ட நெகிழி  வெளியீட்டாளர்களை நாம் பாராட்டாதிருக்க முடியாது.மருதூர் இலக்கிய வானில் மின்னும் கவி தாரகைகளின் ஒன்றான கலைமகள் ஹிதாயா மஜீத் (தடாகம் ஆசிரியை) அவர்களின் கவிதைத் தொகுதி நெகிழி வெளியீடாக நம்மத்தியில் வெளிவந்துள்ளது.

தனது சிறு தொகுப்பும் முதல் தொகுதியும் என்று கூறிக் கொள்ளும் இந்த இளம் படைப்பாளியிடம் குருவை மதிக்கும் உயர் பக்குவத்தைக் காண முடிகிறது.தனது இலக்கியப் பயணத்தின் வழிகாட்டியாக இருந்த அஸ்ரபா நூர்தினை மறக்காது நினைவில் வைத்திருந்தது மட்டுமல்லாது தனது முதல் பிரசவத்தையே வழிகாட்டிக்கு  அர்ப்பணித்துவிட்ட பாங்கு  உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயமென்று துணிந்து கூறலாம்.இதிலிருந்து இப் படைப்பாளி மிகவும் தன்னடக்கம் உள்ளவர் என்பதை இனம் கண்டு கொள்ளலாம்.இரு வரிவசன முறிவுகள் பத்திரிகையில்  வந்து விட்டாலே தலைகால் புரியாது பெருமைக் கொண்டு திரியும் பலரைப் பார்க்கும்  இக் கால கட்டத்தில் இப்படியும்  ஒரு பெண் அதுவும் வழிகாட்டியை மதித்து அவருக்கே அர்ப்பணித்துவிடும் உயர் பக்குவம் கொண்ட கலை மகள் நிச்சயம் வளரும் படிகளில் தடம்  பதிக்கும் சாத்தியம் உண்டெனலாம்.

புதுக் கவிதை யுகத்தில் வரிசைப் படுத்த வேண்டியோர் எண்ணிக்கையற்றுக்கிடப்பினும் முஸ்லிம் பெண் கவிஞர்களை விரல் விட்டு என்னலாம்.அந்த எண்ணிக்கையாளர்களில் தற்சமயம் புதுக்கவிதை, மரபுக் கவிதைகளை அள்ளிக் கொணரும் கலைமகள்  ஹிதாயா இளையவர்கள் மத்தியில் வரவேற்கப்பட வேண்டியவர். கிழக்கு மண்ணில் ஒரு நெருக்கடிமிக்க காலகட்டத்திலும் ஒரு தொகுதி  வெளியிட்ட கலை மகள் ஹிதாயாவை நிச்சயமாக பாராட்டாமல் இருக்க முடியாது. கவிதைகள் சமூகக் குறைகளைச் சுடுகின்றன.சீதனச் சிக்கல்களை தத்ரூபமாய் காட்டயுள்ளார் கவிஞர்.

"புதிய சமுதாயம்"எனும் கவிதை புரட்சிக் கருத்து என்னைக் கவர்ந்த வரிகள் இதிலுண்டு.அது"தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கைகளை வெட்டி எரியாமல்...கட்டிக் காத்து...நாளையாவது புது சமூகம் பிறக்காதா..?"ஆமாம் கவிதையிலே நியாயமான ஏக்கமுண்டு.நவீன புதல்விகள் கவிதை பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அருமையான கவிதை.கூடவே 'வேண்டுதல்' 'இதயக் குரல்' போன்ற கவிதைகளும் பெண்களுக்காகவே எழுதப்பட்டுள்ளன.
 மலையகத்தையும் தோட்டதொழிலான மக்களையும் இரு  கவிதைகளில்  படம் பிடித்துக்காட்டுவதை மனமகிழ்ச்சியோடு பார்க்கக் கூடியதாக உள்ளது.அக்கவிதைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.யதார்த்தங்களை சிறிய வசனங்களில் தனக்கேயுரிய எளிய பாணியில் இவரது அனைத்து கவிகளும் வாசகர்களைக் கவரக் கூடியதாக திகழ்கின்றன.கலைமகளின் கவி உள்ளத்தின் ஊடுருவல் மலையகத்தை மட்டும் மல்ல இந்த மண் முழுவதையும் சுற்ற வேண்டும்.தேயிலைச் செடிகளுக்குப் புதிய விளக்கம் நன்று,பாராட்டுக்கள்.
"துண்டிக்கப்பட்ட மின்சாரம்" நல்ல கவிதை.நன்றாக எழுதப்பட்டுள்ளது.முடிவு சூப்பர்...'காரணம்' கவி அஷ்ரபாவுக்கு எழுதபட்டதோ.....? 'நாளையும் வரும்' மகத்தான தலைப்பு.....'ஆமாம்....போடிப்பார் கூட நாளைக்குப் புல்லாகிப் போவார்.நன்றாகவேயுள்ளது கவிதைத் துளிகள்."இதயக்குமுறல்"  கவியில் 'பெண் இதயங்கள் மறுமையிலாவது சிரிக்குமா?' என்ற வரிகள் ஆழமானவை.உணர்ச்சியுள்ளவை 'பாட்டாளி வாழ்க்கை' "அப்போது தான் இந்த தேயிலை வாச மனதுகள் செழிக்கும்....தரமான வரிகள்.கவிக்கு நல்ல மெருகூட்டல்கள்..'ஆண்கள் என்ற இவர் கவிதையில் ஆண்மை என்ற சொல்லுக்கு இலக்கணம் தொலைத்த பாண்டவர்கள்.என்ற வரிகளில் ஆணினத்தை மிகவும் சாடியுள்ளார்.ஆணினத்தை முற்றிலுமே சாடிவிட்டோம் என்ற ஒரு உணர்வினாலோ அன்றி உண்மையான ஒரு கருத்தோ ஒன்று 'அண்ணா' என்றே கவிதையில் புகுந்து நிலைமையை ஓரளவு சமப்படுத்துகிறது."கலைமகளும் கவிதைகளும்"இப்னுவின் கருத்து நன்று...

கலைமகள் ஹிதாயா மரவுக்கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கதும் மிக மிக மகிழ்ச்சிக்குரியதுமாகும்.இன்னும் பல  தொகுதிகளை இவர் மூலமாக எதிர்பார்க்கின்றோம்.இன்னும் இமயமளவு புகழ் பெற வாழ்த்துவதோடு,இவ்விளம் பெண்ணின் ஆர்வத்துக்கு எனது நல்லாசிகளும் பாராட்டுக்களும்...
                                                            டாக்டர்.சாந்தி கஜந்திரா
                                                              உரும்புறாய்