ஞாயிறு, 12 மே, 2013

நூலாய்வு

நூல் :- பாயிஸா அலி கவிதைகள் 

நூலாசிரியர் :- கிண்ணியா பாயிஸா அலி 

நூல் ஆய்வு :- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
இலங்கையின் 
(ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு  கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை  )விரல் விட்டு எண்ணலாம். 

அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின்   கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில்
முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர் தான் இந்த பாயிஸா அலி.

அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண்  கவியூற்று கசியும் நிலம் மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு 
தன்  கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.

சிந்தனை  ஊற்றுக்களால்  மனம் மகிழ 
எழுதும் விதம் கற்றாய் கவிதைத் 
தரத்தால் இமயச் சிகரம் தாண்டும்
தன்மை பெற்றுவிட்டாய் - பாயிஸா 
அழகொளிக்கும் பாயிசாவின் கவிதை பற்றி நான் நேசிக்கும் இலங்கை மண்ணின் பிரபலமான சிந்தனையாளர் பலராலும் விரும்பப்படுக்கின்ற அறிவிப்பாளரும் .கவிஞரும் .எழுத்தாளருமான சகோதரர் அஸ்ரப் சிஷாப்தீன் அவர்கள் தன்  மனதை தொட்டு மதிப்புரையை இப்படி பதிவு செய்து உள்ளார்.
நவீன கவிதைகள் என்றால் பாலுறுப்புக்களைப் பற்றிப் பேசவது  என்று பலர் நினைக்கின்றார்கள் எதுவும் மறைக்கப் பட்ட நிலையில் இருக்கும் வரை அல்லது தூரத்தே இருக்கும் வரையே அழகானதாக இருக்கும். தமிழில் எழுதும் சில பெண் கவிஞர்கள் அவ்வாறு எழுதுவதன் மூலம் தான் கவனத்தில் ஈர்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் தெளிவானது இதில் முஸ்லிம் ஆண்  கவிஞர்களும் அடங்குவார்கள். மற்றவர்களின் முன்னாள் தான் தனித்துத் தெரிவதற்கு வேறு ஏதும் இல்லாத பெண்களே உடலழகைக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள். 
இதன் மருவடிவமாகவே பாலியளைப்  பச்சையாக எழுதும் படைப்பாளிகளின் செயலை நான் பார்க்கின்றேன். ஆண்களில் சிலரும் கூட இவ்வாறான போக்கில் இருப்பதை நாம் கண்டே வருகின்றோம். பாயிசாவுக்கு அப்படி ஒரு நிலமை என்றைக்கும் எவராது என்பதற்கு அவரது கவிதைகள் உயிர்த் துடிப்போடுப் இன்று சாட்சிப் பகர்கின்றது 
சமகாலத்தில் (தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ) ஈடுபடும் அநேகர் கவிதை என்ற பெயரால் இருண்மையும் .மயக்கமும் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கின்றாகள். எழுதுவோர்களுக்கும் புரியாமல் படிப்பவர்களுக்கும் புரியாமல் பெருந் திண்டாட்டமே நடந்தது கொண்டிருக்கிறது. மாறாக இதற்கு அப்பாட்டபட்டவர் பாயிஸா அலி. யாரும் அவர் எழுத்துக்களை விரும்பி படிக்கலாம். 
1997 - இல் தினகரன் சிறுவர் பகுதில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரைக்கும் இடைவெளியின்றி எழுதிக் கொண்டிருப்பதோடு ஏற்கனவே 'சிகரம் தொடவா , தங்கமீன் குஞ்சுகள், எனும் இரண்டு சேருவர் இலக்கியங்களையும் தந்து உள்ளார். 
ஆழமான இவரது அனைத்துக் கவிதைகளும் மனதை தொட்டுச் செல்கின்றது.
நடுங்கும் விரல் நுனிக்களுக்கும்
செவிப்பாறைக்கும் இடையிலோர் 
மனித மிருகம் தனதான 
பிறப்பின் முழு ரகசியங்களையும்
படு அநாகரீகமாய் ஒளி வடிவமிட்ட படி
தன்  கோர நாவினாலென் 
உணர்வுளை  வராண்டுகிறது. 
என்று அருமையாகச் சொல்கின்றார். 
மேலுமிரு வண்ணாத்திகளாய், நானாகவே, சடன ஓய்ந்த பொன்மழை, தோழமையின் விரிகைக்குள்ளே,கனவுப் பூக்களும் கண்ணாடிக் கண்களும், அயல் வீட்டுப் பீர்கங்காக்  கொடி,பச்சைப் பொய்கள்,நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள், கண்ணீரில் கரையும் தலையணைகள், பேரலையின் முடிவினிலே, ஒற்றை வரி  ஒளி விசிறும் சிறு பூ, கருஞ்சுவரில் குழாய் வரைந்து, ஆயுதம்  இங்கே, சிட்டுக்குருவியே  சிட்டுக்குருவியே, ஒப்படைத்தாயிற்று ,இனியும் பொழியேண், கறந்த பாலின் வெது வெதுப்பாய், பாகற்காய்த் தீவுகளுக்குள், சிட்டுக் குருவிகளின் சிறை வாசகம், கால நேரம் சாலையோரம் மிதந்துவரும் நுரைப்பூவாய் ,அரூபமானவன்,ஒற்றைப் பூவும் உதிருமுன்பே, செல்லக் குழந்தையாகியே,கடல் கனவுக்குள் மிதக்குமோர் வெற்றுப்புன்னகை  மீளவேண்டும், தசை ரோபோ, உனக்கே உனக்காய் ,அபூர்வம், நீ, வெள்ளைச் சிரிப்பினிலே, பாறாங்கல், சீருடைப் பிறையே, கடைசி இருக்கை ஆகிய 43 கவிதை தலைப்புக்களில் 90 பக்கத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளது. கைக்கு அடக்கமான  நூல் இந்த நூல் பாயிசா அலியின் கவிதைகள் ஏற்றுக்கொள்கின்றேன். அவர் பிரசவம் என்று ஆனால் ஒரு குறை எனக்கு அவரது பிரசவமான கவிதைக் குழந்தைகளுக்கு ஒரு பெயர் வைக்காமல் விட்டது 43 அருமையான ஆழமான கவிதைத் தலைப்புக்களில் ஒரு தலைப்பை வைத்து இருந்ததால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் அத்தோடு இந்நூல் தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கள்  சபையினது அனுசரனையுடன் அச்சிடப்பட்டுள்ளது. 
தனது அன்புக் கணவருக்கு  நூலை சமர்ப்பணம் செய்து உள்ளார். 
ஈழத்தின் பெண் கவிஞர் என்ற வரிசையில்  அதுவும் முஸ்லிம் எழுத்தாளர் என்ற வகையில் உரிய இடம் அளிக்கப்படுதல் அவசியம் இதில் எவரும் பின் நிற்க முடியாது  முஸ்லிம்  பெண் எழுத்தாளர்களின்  கௌரவம் பெண் பாடல் வேண்டும் என்பதை நாம் அறிவோம். 
பாயிசாவின் எழுத்துப் பணி தொடர மன நிறைவோடு அல்லாஹ்வைப் பிராத்திக்கின்றேன்.


இந்த நூலின் விலை 250 ரூபா 
இந்  நூலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

கிண்ணியா எஸ் . பாயிஸா அலி 
முனைச்சேனை வீதி,குரிஞ்சாகேணி - 03, கிண்ணியா
sfmali@kinniyans.net or www.faiza.kinniya.netசனி, 24 டிசம்பர், 2011

நூல் ஆய்வு

 

நூல் : மலரும் மொட்டுக்கள்  
ஆசிரியர் : உ .நிசார்
நூல் ஆய்வு: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

 ' நல்ல கவிதைகள் சமுதாயத்தின் சிறந்த வழி 'அந்த வகையில் இன்றைய காலத்தின் தேவையாக இளஞ் சிறார்கள் நெறிப்படுத்தும் வழி காட்டியாக கவிதைகள் அமைவது அவசியம் .
கவிஞர் உ .நிசார் அவர்களின் இக் கவிதைத் தொகுதி அதற்க்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக அமைகிறது
இன் நூலில் மலரும் மொட்டுக்கள் என்ற கவிதையோடு பதினெட்டுக் கவி மொட்டுக்கள் மலர்ந்து மணம்  பரப்பி
அழகு காட்டி நிற்கின்றன .
இன்றைய மொட்டுக்கள் நாளையமலர்கள் என்பது போல ,இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்தை முதல் கவிதையூடாக ஆசிரியர் விளக்கிச் செல்கிறார்
மேலும் இக் கவிதைத்  தொகுதியில் என்னை வெகுவாகக்
கவர்ந்த்த பாடலாக'உழைத்து  உண்ணப் பழகு 'அமைந்த்துள்ளது இப்பாடல் தாங்கி வரும் ஒவ்வொரு வரியும்
ஒளி வீ சும்முத்துக்களாக அமைந்த்துள்ளது

அக் கவிதையின் சில வரிகள்
உண்மை உரைக்கப் பழகு
       ஊரார் மதிக்கப்  பழகு
நன்மை செய்யப் பழகு
       நாவை பேணப் பழகு

ஒற்றுமை ஓங்கப் பழகு
      உறவை வளர்க்கப் பழகு
வெற்றி கொள்ளப் பழகு
     வேற்றுமை  தவிர்க்கப் பழகு
இன்னும் ஒரு கவிதையில்

குழந்தாய் குழந்தாய்  கதை கேளு
கொஞ்சும் தமிழில் கதை கேளு
விழுந்த ஆப்பிள் பழமொன்றால்
விஞ்ஞானம் வளர்ந்த கதை கேளு

ஐசெக்  நியூற்றன் அன்றொரு நாள்
ஆப்பிள்மரத்தின் நிழலொன்றில்
ஓய்வாய் இருக்க ஆப்பிலொறு
தலையில்  விழுந்த கதை கேளு

இவ்வாறு நல்ல பல ,ஆசிரியாரின் கற்பனையில்  மணம் வீசுகின்றது மலரும் மொட்டுக்கள் வா வெண் புறா கல்வி கற்ப்போம் ,கல்யாணம் ,குட்டி முயலே , காந்தி தாத்தா ,மரங்கள் நடுவோம் ,எங்கள் குடும்பம் ,புகைவண்டி ,தப்பி பாப்பா ,மரங்கள் , ஏற்றமிகு இலங்கை ,இரவு சிரித்தது , உழைத்து உன்னப்  பழகு புவியீர் ப்புவிசை ,இன்று போய் நாளை வா , 
நியாயம் எங்கே ,பந்தடிப்போம் இவ்வாறு தலைப்புக்களில் கவிதைகள் இடம் பெற்று உள்ளன
பதினைந்து  வருடங்களுக்கு மேலாக தரம்   ஐந்தில் கற்பித்தல் பணியில் கவிஞர் ஈடுபட்டதால் சிறுவர்களின்  மனப்பாங்கு , ,சிறப்பாற்றல்கள் ,சொல்வளம் ,கலையுணர்வு ,அனுபவரீதியாக நன்கு உணர எனக்குவாய்ப்பு கிடைத்ததால் தான் சிறுவர்களுக்கான பாடல்களை இயற்றுவதில் தனக்கு பெரிதும் உதவியாக இருந்தததாக ஆசிரியர்  குறிப்பிடுகிறார்
இன் நூலில் எதுகை ,மோனை ,சந்தம் என்பன ஒருங்கே அமைய இயற்றப் பட்டுள்ளதால் சிறுவர்கள் ஓசையுடன் பாடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு .இந்த நூல் இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சினாலும் மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரநைலனைல்  அச்சிடப்பட்டுள்ளது
நூலைப் பெற விரும்போவோரும்  ஆசிரியருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர்
உ .நிசார் ,
70/3, புதிய கண்டி  வீதி ,
மாவனல்லை
இலங்கை 
தொலை பேசி .035.2248409.

சனி, 19 நவம்பர், 2011

மனங்களின் ஊசல்கள்

நூல் : மனங்களின் ஊசல்கள்
ஆசிரியர் : தாரிக்கா  மர்சூக்
நூல்ஆய்வு : கலைமகள்  ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின்  கலை இலக்கிய  பூங்காவில் நறுமணம் வீசும்  கலைப் பூக்கள் மிக...  மிக..அரிதாக  பூக்கும்  இடம்  தான் குருநாகல்  பிரதேசம் .
இந்த இடத்தில் தென்றலோடு  கலந்து நறுமணம்  வீசும் ஒரு சில  பூக்களில் ஒன்று தான் இந்த தாரிக்கா  மர்சூக்.
கவிதை,கதை  என்று எம் மத்தியில் பல நூல்கள் பூத்தாலும் கூட கட்டுரை நூல்கள்  பூப்பது மிகக் குறைவானதே ஆகும் .ஏழு  வயதில் கவிபாடிய சுப்பிரமணிய பாரதியை ஞானக் கண்ணாற் பார்க்கும் நம்மில் சிலர், ஏனோ இன்று பதினைந்து - இருபது வயதுகளில் கலை இலக்கியம் படைக்கும் எம் யுவதிகளை வாலிபர்களை, ஊனக் கண்ணாற் பார்ப்பது காணக் கூடிய செயலே.
பேரும் புகழும் வரவேண்டு மென்று எழுதுகின்றார்களே என்று எம் மத்தியில் தரமான கலையுள்ளங்களை வளர விடாது தடுக்கும் இவர்கள் ஏன்  சமூகத்துக்குச் செய்யும் தூய்மையான பல  காரியங்களுள் இலக்கியம்  படைப்பதுவும்  ஒன்றாகும் என்பதை மறந்து  விடுகிறார்கள்
இங்கே தாரிக்கா இலக்கியமே இலட்சியமாய் இலட்சியமே  இலக்கியமாய்  கருதுகின்றார். தனது நெஞ்சக் கனலில் நீராகி  தன்னைத் தானே நீராக்கி கொண்ட அனுபவத்தை தான் "மனங்களின் ஊசல்கள் "மூ லமாக உணர் வோமியமாக்கித் தந்து  உள்ளார் .
விரைந்து  செல்லும்  உலகத்தில் விரிந்து செல்லும் அனுபவ நூதனங்களில் திசைகளைத் தொலைத்து  திருப்தி இழந்து வரும் மனிதர்களின்  வாழ்வுக்கு ஒரு புத்தி ஜீவிகளின் தாகத்தைப்  போல தாரிக்கா ஒரு  தாகத்தில் தவிப்பதை   "மனங்களின் ஊசல்கள்" மறு பதிப்புச்  செய்கிறது .
படைப்பிலக்கியம்  மனித  வாழ்க்கைக்கு பயனளிப்பதாய்  இருக்க வேண்டும்  என்ற நம்பிக்கையோடு தாரிக்கா எழுதுவதை அவரது  சிந்தனை யோட்டத்திலிருந்து  தெரிந்து  கொள்ள முடிகிறது.இந்த  உலகத்தின் எந்த ஒரு
மூலையிலாவது அடையாளம்  தெரியாத  யாரவது  சிலராவது  தாரிக்காவின்   மனங்களின் ஊசல்களால் மறு  பிறவி  எடுக்கக்  கூடும் என்ற  நம்பிக்கை  எனக்கு  இருக்கிறது .
இலங்கையின்  ஒரு  கரையோரத்தில் யாரும் அறியாத ஒரு மூலையில்  இருந்து கொண்டு  மானிட நேயத்தின்  உந்துததால் போதனைக்கென்று புறப்பட்டிருக்கும்  இந்தப்  பெண்ணின் மீது பிரியமே  அதிகரிக்கின்றது. உலகத்தைச் சுற்றிச்  சிறகடித்துப்  பறந்து உயிர்களின் அவஸ்தைகளோடு  உறவாடும் சந்தர்ப்பங்கள்  தாரிக்காவுக்கு சுதந்திரமாக்கப் பட்டிருப்பதால் நாடு போற்றும் ஒரு  சிந்தனைப் பெண்  போராளியை  நாம் தரிசிக்க  முடியும்.
    
சிந்தனை வட்டத்தின் (215) ஆவது வெளியீடாக "மனங்களின் ஊசல்கள்"கட்டுரைத் தொகுதி  வெளியாகி உள்ளது. இதில்  மொத்தம் (55) கட்டுரைகள்  உள்ளன.கடமையற்றவனுக்கு  உரிமை  இல்லை , பிரச்சினைகளில் நாம் ,அனுபவமே அறிவு, வீர்வாகி நீங்களே வேண்டாமே ,பொறாமை,அவசர  யுகம்,வெற்றின் இரகசியம் , யோசனைகளை கூர்மையாக்கும் விமர்சனங்கங்கள் ,முயற்சியே முதற்படி ,வெற்றி ஒரு பாடத்திட்டம் ,நீங்களும் தலைவராகலாம் ,ஊனமுற்ற சிறுவர்கள் ,வாழ்க்கை  வாழ்வதற்கே ,குடும்பப் பிரச்சினைகளின் தீர்வு இதுதான்
ஆசிரியர்களின் தவறு ,மனங்களிடையே நட்புறவு ,தாயின் தவறு,  விவகாரத்தின் விபரீதம் ,நான் என்கின்ற மையம் ,தொழில் ஒரு தூக்குக் கயிறாய் ,சிறகை விரித்ததால் சிகரம் தொடலாம் ,வீட்டுப் பிரச்சினைக்கு  மருந்து வீட்டுக்குள்ளேயே ,பிள்ளைகளை துன்புறுத்தும் தாய் , ஏழைகளுக்கு உதவுங்கள் , முதுமை,இல்லறத்தில்அமைதி நிலை,திருமணம் பெற்றோர் சம்மதம்  தேவையா,வார்த்தைகளிலே வாழ்க்கை,நன்றி சொல்ல வேண்டும், திறமை புறக்கடிக்கப்படுகிறதா ?, இன்றைய
இளைஞர்கள்,படிப்பே பாரமா ?, வாழ நினைத்தால் வாழலாம் ,கசப்பாகி துப்பி  வீசுங்கள் ,தப்பு ஏன் ,எங்கே தேடுகிறீர்கள் ,விதியை நம்பாதீர்கள் , மனம் விட்டுப் பேசுங்கள் ,காலம் கடந்த கை சேதம் ,வாழ்க்கைக்கு ஒரு ஏவுகனை ,வேலை செய்யும் பெண்களின் பிரச்சினைகள் ,தோல்விகளுக்கு நியாயம் இல்லை ,நாம் நமக்குள் முழுமையானால் ,வாழ்க்கை என்பது , அந்த நாள்  ஞாபகம்,ஆசை அலை போல, மன்னிப்பும் மருந்தாகும் ,மன நிம்மதிக்கு என்ன விலை,ஆளுமை இன்றேல் தாழ்மை தான் ?,படித்தால் மட்டும் போதுமா ?,யார் பரிபூரணவாதி ,மாசற்ற  மனமே ,பலமும் பல வீனமும் ,அன்பான பேச்சு ,பெறோரின் நலன் பேணல்  போன்ற தலைப்புக்களில்  கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நூலை வெளியிட  ஊக்கத்தை ஏற்படுத்தியதுடன்  இந்த  நூல்வெளிவர  காரணமாயிருந்த  அன்புச் சகோதரி ஹிதாயாவை குளிர்ந்த மனதோடு  நினைவு  கூருகின்றார்.
பூமிக்கடியில் ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் 
அடிமரம்  போல் தாரிக்காவின் சிந்தனைகளும்  நீண்டு செல்ல தூய   மனதோடு வாழ்த்துகின்றேன் ..
நூலாசிரியருடனான சகல் தொடர்புகளுக்கும், 
 mrs .tharika marzook
no .32/2,lake side estate,
kurnagala.srilanka .

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நூல் ஆய்வு.....

நூல் : நெற்றிக் கண்
ஆசிரியர் : நாகபூஷணிகருப்பையா
நூல் ஆய்வு :கலைமகள் ஹிதாயா றிஸ்வி
                     ஆடுதல்  பாடுதல்  சித்திரம் - கவி
                     ஆதியினை கலைகளில்,
                      ஈடுபட்டென்றும்  உழைப்பவர் -பிறர்
                       ஈன நிலை கண்டு  துள்ளுவர் .


வானொலிக் கலைஞர் நாகபூஷணி கருப்பையாவின் 'நெற்றிக்கண்'எனும் கவிதைத் தொகுதியின்  கவிதைகளைப் படிக்கையில் பாரதியின் மேற்கூறிய கூற்று எம்முள் வந்து செல்வதனைத் தவிர்க்க முடியவில்லை. குரலினாலும் உணர்வுமிக்க ஆற்றல் வெளிப்பாட்டினாலும் அனேக நேயர்களைக் கொள்ளை கொண்டுள்ள நாகபூஷணி,பேராற்றல்மிகு ஆயுதமொன்றைக் கையிலெடுத்துளார் .இவ்வளவு நாட்களும் அவர் வாய்பேசியது,இப்பொழுது அவரது கையும்,அது பற்றிய பேனாவும் பேசத் தொடங்கியுள்ளன.எழுத்தின் மூலம் வெளிப்படுவது  ஒருவரது சுயமேதான்.

தான் கண்டவற்றை,தான் உணர்ந்தவற்றை,தன்னைப் பாதித்தவற்றை.தன்னை மகிழ்வித்தவற்றை,தனது ஏமாற்றங்களை,தனது மாற்றங்களை என்று எல்லாவற்றையும் தாமாகவே,தன்னிலை நின்று பிறருக்குச் சொல்லும் போது மனது மிகவும் திருப்தியுறுகிறது.அந்த உணர்வு வெளிப்பாடு சுயபாஷையில்,சுயனடையில்,சகலவித மழலைத் தன்மையுடனும் தான் தொடங்க வேண்டும் ,இதற்கு எந்தவித இலக்கண இலக்கிய வரையறைகளும் இருக்கத் தேவையில்லை என்பதே எனது கணிப்பு.அந்த வகையில் நாகபூஷணியின் உணர்வுகள் பேசத் தொடங்கியுள்ளன.40 கவிதைகள்.ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.தந்தையின் மீதான பாசமிகு நேசமும்,மதிப்பும்,பொறாமைப்படு
ம் அற்பர்மேல் பரிதாபம்,கள்ளமற்ற மனம்,கபடமாய் மாறிய ஏக்கம்,விழித்தபடி தூங்கும் மக்களின் அறியாமை கண்ட ஆற்றாமை,ஊர்மிளைக்கு நியாயம் கெட்ட உரிமைக்குரல்,அலைகளைச் சிறைப்பட்ட பெண்ணுக்கு ஒப்பிட்ட அங்கலாய்வு,தடைதகர்க்கும் துணிவு,சந்தியா காலத்தையும் மழை நாட்டையும் ரசிக்கும் அழகுணர்வு இப்படி ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு உணர்வுகளைத் தமது பாஷையிலேயே சொல்லி நிற்கின்றன.

நிஜங்களை தரிசித்த,தடம் பதித்த கோலங்கள் கவிதைகளின் வரிவடிவங்களில் பரிணமிக்கின்றன.
                 நிஜங்களின்
                 வேதனைப்
                 பிரசவங்கள்
                 சங்கடங்களில்
                 அழுத்தத்தில்
                 கணக்கும்
                 இதயம்
                 சட்டென்று
                 எதைச் செய்யும்
                 பிரார்த்திப்பதைத் தவிர......
மனவேதனையின் அழுத்தத்தை உள்மனதுள் புதைத்து,வேதனைச் சூட்டை மட்டும் வெளியில் விடுவித்திருப்பது புரிகிறது.உணர்வுகளை அடக்கி வாசிக்கையிலும்.ஒரு இளம்பெண்ணின் உள்மனது வெளியில் தலிகாட்டுவதை அவரால் தடுக்க முடியவில்லை.அவர் விழிபேசும் மொழி எவர்க்கும் புரியாமல் இல்லை.உவமான உவமேயங்களுடன் கூடிய விழிப்பாஷைக்கு மொழி உதவ வேண்டுமெனில்; உரைப்பவரின் கவித்துவம் துனைக்குவர வேண்டும்.நாகபூஷனிக்கு அது தோள் கொடுத்திருக்கின்றது.தொழில் செய்யும் பெண்ணின் அன்றாட நிலைமையை எடுத்துரைக்கையில்,அவரது உள்மனவெளியில் உணர்ச்சிகள் பீறிடுவது புரிகிறது.ஆனால் அவை உணர்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடுவது பரிதாபகரமானது.பிள்ளையே வேண்டாம்,இது ஈனப்பிறப்பென்று,புதுப்ப்டையே வரவேண்டாம் என்று தடுக்கும் அளவுக்கு சமுதாய சீரழிவுகள் மலிந்து கிடப்பது யதார்த்தம்.

மழைக்கால மகழ்ச்சியும்,வெய்யிலின் வேதனையும்,பார்வையின் பாவங்களும்,தாலிக்கு கூலி தரும் சங்கடமும்,நாகமான மண்புழுவின் பரிதாபமும்,கலைஞர் வாழ்வின் கஷ்டங்களும்,கூட்டு வாழ்வின் குதூகளிப்பும்,நட்புக்களின் நயவஞ்சகமும் எனப் பலப்பல விடயங்களைத் தொட்டுள்ளார் நாகபூஷணி. அவரது கவிதைத்துவத்தை நோக்குகையில் கீழ்க்குறிப்பிடப் பட்டுள்ளவை அதற்கு உதாரணங்களே.

                        பிணமென ஆதல் ஒன்றே,
                        பிறப்பின் முடிவென்ற்றரியாது,
                        மணக்கின்ற சாக்கடையாய்,
                        மாறிய மனித குலம்....(அற்பம்)

                       தெளிந்தோடும் அருவிகளும்,
                       நீள்தொடராய்க்   குன்றுகளும்,
                       வழிநெடுக மரங்களுடன்
                       வீசு தென்றல் தவழ்ந்துவர
                       களிகொண்டு ஆடவைக்கும்,
                       கவர்ச்சிமிகு மலைநாடு ....(வளமுள்ள மலைநாடு)


வளர்ந்து வரும் இளம் கலைஞர்களில்,கவிஞர்களில் வளர்ந்து விட்ட அறிவிப்பாளர் நாகபூஷணியும் இருக்கப்போகின்றார்.என்பதற்கு இவரது இந்த கவிதைத்தொகுதி கட்டியம் கூறி நிற்கின்றது.
இவரை  அன்புடன்  அரவணைத்து  ஊக்கப்படுத்தி
 இன்று "நெறிக் கண்"நூலாய் வெளிவர காரணமாய்  இருந்த  தோழி  ஹிதாயாவை  இதயம்  பிராத்திக்கும்  நன்றியோடு  நினைவு  கூறுகின்றார்
சிந்தனை  வட்டத்தின் (180)வது  நூல்  இது புண்ணியாமீன்  சகோதரன்  என் ஓயா நன்றிக்கு  உரித்தானவர்  என்று நன்றியோடு நினைவுப் படுத்துகிறார்.இந்த  பைந்தமிழ் ப்  பாவையின்  நறு ந்தமிழ்  பாக்கள் இன்னும்  செழித்துப்  பூக்கட்டும் !தமிழிக்கினிமைசேர்க்கட்டும் ! என இதயம் கனிந்து  வாழ்த்துகிறேன் .
இவரது முகவரி
நாகபூஷணி கருப்பையா(அறிவிப்பாளர்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
கொழும்பு-07
தொலைபேசி-0777-349737

சனி, 16 ஜூலை, 2011

நூலாய்வு

நூல்: விடியலின் விழுதுகள்
நூலாய்வு:கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நூல் ஆசிரியை:ஸக்கிய்யா சித்தீக் பரீத்


மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வாழ்விடமாகவும் கொண்ட இந்த நூல் ஆசிரியை ஸக்கிய்யா பரீத்.கொழும்பு  ஸாஹிராக்  கல்லூரியின் ஆசியைகளில் ஒருவர். இவர் தமிழறிவும் ,ஆற்றலும்   ,கற்பிக்கும் திறனும் ,ஆளுமையும் கொண்டவர்.அறிஞர் ஏ.எம்.ஏ அசீஸ் கலாநிதிக்குப் பிறகு ஸாஹிராவில் இறுதியாக நடை பெற்ற முத்தமிழ் விழாவின் போது ஸக்கியாவின்  வகிபாகம் மகத்தானது.அவ்விழாவில் வைத்தே தனது  முதலாவது நூலான "ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் "என்ற நூலைப் பிரசவித்தார்.திருமதி ஸக்கியாவின் ஆசிரியர் வாண்மையும் நல்லொழுக்கப் பண்பாட்டு  விழுமியங்களும் ஒரு புறமிருக்க அவரது எழுத்து வாண்மையைப் பற்றியும் சற்று அலச வேண்டியிருக்கிறது.பொதுவாகவே ஓர் ஆசிரியராயிருப்பவருக்கு சரளமாய் எழுதவும்,பேசவும் இயலும் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை தான்.ஆனால் அவர்கள் அனைவராலும் மிகச் சிறப்பான முறையில் கதை,கட்டுரை,கவிதைகள் வடிக்க முடியுமா? என்பது ஐயத்துக்குறியதே  .ஆனால் எமது தாய்த் திரு நாட்டைப் பொறுத்த அளவில் மிகச் சிறந்த இலக்கியவாதிகளும்,எழுத்தாளர்களு
ம் ஆசிரியர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்,இருந்தும் வருகின்றனர்.இவர் திருப்பம்,மங்கா வடு,காலத்தின் கோலம்,கண்ணீர் எழுப்பிகள்,இறைத் தீர்ப்பு,திசை மாறிய பறவை,நிரபராதிகள்,கோக்கி யார்?,மின்னும் தாரகை,இணங்கிப் போ மகளே!,இழவு காத்த கிளி,முக்காட்டினுள் மாமி,நியதி போன்ற பதின்மூன்று தலைப்புக்களில் இவரது சிறுகதைகள் விடியலின் விடிவுகள் நூலாக தோன்றியது.சுப்ரமணிய பாரதி கூட,தனது பா,கவிதை வடிவங்களோடு உரைநடையில் காத்திரமான கட்டுரைகளை படைத்தளித்த தோடு சமூக நீதியைப் போதிக்கும் சிறுகதைகளையும் எழுதினார்."சிறுகதை மன்னன்"என்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றிப் புகழப்படும் புதுமைப்பித்தன் போலவே இலங்கையிலும் பல புகழ்மிக்க சிறுகதை ஆசிரியர்கள் தோன்றினார்.புதுமைப்பித்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.அவரினால் ஈர்க்கப்பட்டு அவரின் அருட்டுணர்வில் யதார்த்த பூர்வமான சிறுகதைகள் வடித்தவர்தான் இலங்கையின் கிழக்கு மண்ணைச் சேர்ந்த "பித்தான் ஷா"என்பவர்.கே.எம்.ஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர் புதுமைப்பித்தன் மீது கொண்ட அபிமானத்தால் தந்து பெயரைப் "பித்தன் ஷா"என்றே மாற்றியமைத்துக் கொண்டார்.இவரது சிறுகதை சர்வதேசத்தரம் வைத்ததாகும்.இவரை நிகர்ந்த பல சிறுகதை ஆசிரியர்கள் எமது நாட்டிலும் தொன்றியுருக்கின்ற்றனர் அவர்களுள் இலங்கையர்கோன்,மூ.தளையசிங்கம்,தாழையடி சபாரித்தனம்,டொமினிக் ஜீவா,கே.டானியல்,தெளிவத்தை ஜோசப்,செ.யோகநாதன்,மருதூர்க் கொத்தன்,அ.ஸ.அப்துஸ் ஸமது,பீ .எம்.புன்னியாமீன்  போன்றோர் (பட்டியில் நீண்டது) குறிப்பிடத்தக்கவர்கள்.காலச்சுழற்சியில் பலர் மறைந்து போகச் சிலரே எஞ்சி நிற்கின்றனர் புதியவர்கள் சிலரும் முனைப்புடன் சிறுகதைகள் படைத்தளிக்கின்றனர்.புதியவர்களில் எஸ்.எல்.எம்.மன்சூர்,ராஞ்ச குமார்,திக்குவல்லை கமால் (இன்னும் பலர்)போன்றோரைக் கோடிட்டுக் காட்டலாம்.எமது பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அதுவும் முஸ்லிம் பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் சிறுகதை படைத்தளிப்போர் எம்மத்தியில் மிகக் குறைவு என்று தான் கூறவேண்டியுள்ளது.எமது பெண் படைப்பாளிகள் அதிகமாகம் கவிதைகளையே எழுதிவருகின்றனர்.சிறுகதைகள் அல்லது நாவல் என்று வரும் போது வெகுசிலரே எம் மனக்கண்முன் நிற்கின்றனர்.ஒரு நயீமா சித்தீக்கும் ஒரு சுலைமா ஏ ஸமீயும்,ஒரு கெக்கிராவை ஸஹானாவும் ஒரு மஸீதா புன்னியாமீனும்  ஒரு புர்கான் பீ இப்திகாருமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நான் குறிப்பிடும் இவர்கள் அனைவரும் சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.கலைமகள் ஹிதாயா றிஸ்வி,எம்.ஏ. ரஹீமா,சம்மாந்துறை மசூரா, சித்தி ரிஜா,காத்தான்குடி நஸீலா,ஜரீனா முஸ்தபா,ஜெனீரா அமான்,பௌசியா நூர்தீன்,சர்மிளா ஸைத் போன்ற  சில நல்ல சிறுகதை ஆசிரியைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரகாசித்தாலும் இன்னும் இவர்கள் இலைமறை காய்கள் என்றே கூறவேண்டியுள்ளது.திருமதி ஸக்கியா சித்தீக்,ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்.தமிழ் மொழியை நன்கு கற்றவர் உண்மையில் எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.சிறுகதை எழுதும் ஆற்றலும் ஆளுமையும் கற்பனை வளமும் கதை கூறும் பாங்கும் வைக்கப் பெற்ற இவர் ஏன் இது கால வரை பத்திரிகைகளுக்கு எழுதாமல் இருந்தார் என்பது தான்.ஆனால் இத்தொகுப்பின் மூலம் இவரது மேதாவிலாசம் நாடெங்கும் துலாம்பரமாகத்தான் போகிறது.அன்றாட நடைமுறைகளை யதார்த்த பூர்வமாகச் சொல்கிறார்.தனிமனித அவலங்கள்,சமூக நெறிமுறைகள்,மனித நேயமும் அதற்கெதிரான நடத்தைகளும்,கழிவிரக்கம் போன்ற கருத்தியல்கள் இவரது கதைகளில் விரவிக்கிடக்கின்றன.உதாரணமாக திசைமாறிய பறவை,இணங்கிப் போ மகளே,கோக்கி யார்? போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை."காலத்தின் கோலம்"என்ற சிறுகதை நகைச்சுவைரசம் சொட்ட எழுதிப்பட்டுள்ளது.சிறிய சிறிய பந்திகளாக "விறு விறு"என்று கதை சொல்லப்படுவதனால் வாசகர்களது மனதில் ஓர் ஆவலைத்தூண்டி முழுக்கதையும் ஒரே மூச்சில் வாசித்து விடவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் கதாசிரியை வெற்றிகொண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.திருமதி ஸக்கியா சித்தீக்கின் கதை சொல்லும் ஆற்றல் மேலும் விரிவடைந்து இன்னும் சில சிறந்த தொகுதிகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இத் தொகுப்பின் வெற்றிக்கு எனது ஆசிகளை வழங்குகின்றேன்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

மூடு திரை

நூல்: மூடு திரை (சிறு கதை தொகுதி)
 ஆசிரியர்: மஸீதா புன்னியாமீன்
நூல்ஆய்வு : கலைமகள்ஹிதாயாறிஸ்வி

வானைத் தொட்டு  விட வேண்வாக் கொண்டுவளர்ந்த மலைகள், அதில் தங்கி களைப பாற்றிக் கொள்ளும் வெண் பஞ்சு முகில்கள்,பொன் வண்ண மழை மங்கையின் மேனியெங்கும் போர்த்தியிருக்கும்,தேயிலைப் பசும் பட்டாடைகள் தாயின் மார்பில் ஊறிச் சுரக்கும் ஜீவ அமுதம் போல் மழை மாதாவின் இதயத்தில் ஊறிச் சுரந்து ஓசையிட்டுப் பாடி வரும் குளிர் நீர் அருவிகள்.இயற்கையும்,செயற்கையு
ம் இணைந்து கை கோர்த்து களி நடம் புரியும் கவின் மிகு காட்சிகள்.இந்த அழகு ஓவியம் நிறைந்த மலையகத்தை வசிப்பிடமாக கொண்டவர் மஸீதா புன்னியாமீன். காலி கட்டுக் கொடையை பிறப்பிடமாக கொண்டவர்.கணித விஞ்ஞான ஆசிரியையான இவர்  80 காலப் பகுதியில் கலையுலகில் பிரசித்தார்.இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்.அழகான பார்வையும்,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய்,கவிஞராய் தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது கவிதைகளும் கதைகளும் காத்திரமான கருத்தாலமிக்கது.சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது கதைகளில் நிறைந்து காணப்படும்.பெண்ணியத்தை கண்ணியமாய் மதிக்கத் தெரியாத காட்டு மிராண்டித் தனம்,காடைத்தனம்,சமுதாய அடக்கு முறை,ஒடுக்கு முறை ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் பாங்கில்,இவரது கதை போக்கு சரிவில்லாமல் வளர்ந்து செல்லும்."நாளைய சந்ததியின் இன்றைய சக்தி"என்ற இலச்சினையோடும்,இலட்சியத்தோடும் இடையுறது உழைத்து வரும் "சிந்தனை வட்டத்தின்"298 வது வெளியீடாக மஸீதா புன்னியாமீனின் "மூடு திரை"எனும் சிறுகதைத் தொகுதி.இந்த தொகுதியில் 09 சிறுகதைகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. அவற்றில்,"நிலவுக்கொரு மூடுதிரை"எண்ணும் தலைப்பிலான சிறுகதை,விதவை சமீராவின் விசும்பலை,விரக்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.வாழாவெட்டியாய் வயிற்றுப்பாட்டுக்குவழி தேடியவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வனிதையரின் வாழ்க்கைச் சவடால்கள் கதைக் கருவாய் சுட்டப்படுகின்றன.
                                       ".........அந்திப்பட்டா ஊட்டோட வாசலோட அடங்கியிருக்காம,எங்க போய் தொலஞ்சண்டு......கேட்டன்.கண்ட கண்ட கழுதயெல்லாம் ஒண்ட உம்மா எப்படி ஈக்கா என்று சாட கேக்கிறானுவள்.வாப்பா இல்லாமப் போனபொறவு நீங்க முந்தி மாதிரி இல்ல...இப்ப..."
 மண்வாசனை சொற்களோடு கூடிய இக்கதை,விதவைகளுக்கு மறுமணம் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது."கறைகளும் கரைகளும்"என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகின்றன.தளர்ச்சி கண்டு தள்ளாடும் தந்தையைத் தணியாத தாட்சணியத்தொடு தாபரிக்கும் தனயன்,அவனது அன்புக்கு அடிமையாகி,அடக்கவொடுக்கமாய் மாமனாரை மதித்து மரியாதை செய்யும் மனைவி -மக்கள் என,படைக்கப்பட்ட கதா பாத்திரங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால்,அதுவே பெரும் மன நிறைவைத் தரும்."நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்பதற்கு இந்தக் கதை அழுத்தம் கொடுக்கின்றது.கதாசிரியை மஸிதா புன்னியாமீன்,சுனாமிப் பேரலைச் சூறையாடலையும் சொந்த வாழ்வில் கண்டு,சொந்த பந்தங்களை இழந்து சொகித்த்தவர்.அந்த அனுபவத்தின் அவதிப்பாட்டை அவர் "முகவரியில்லா முகம் "என்ற கதையில் வேதனை விசும்பலோடு வெளிப்படுத்தியுள்ளார்.காலி மாவட்டக் கட்டுக் கொடைக் கடற்கரை உறவினரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தை அக்கதையில் நாம் காணலாம்."துருவங்கள்"என்னும் கதையில்,இரு வேறு கதாபாத்திரங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்றன.அளவோடு குழந்தைகளைப் பெற்று,வளமோடு வாழ வேண்டுமென எண்ணும் தாய் ஒரு புறம்."இறைவன் தருகிறான்.நாங்கள் பெறுகிறோம்....."என்ற வீறாப்புடன் வாயாடி அளவுக்கதிகமாகக் குழந்தைகளைப் பெற்று,பேணி வளர்க்க தெரியாத தாய் ஒரு புறம்.இரு சாராரும் வெவ்வேறு துருவங்கள் என்பதைக் கதாசிரியர் சுட்டியுள்ளார்.உருவம்,உள்ளடக்கம்,உத்திமுறை அனைத்தும் ஒவ்வொரு கதையிலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.மஸீதா புன்னியாமீன் படைத்த சிறுகதைகளில்,நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த நியம வாழ்வை  நாம் தரிசிக்க முடிகின்றது."நெருடல்கள்"என்னும் தலைப்பில் அமைந்த கதை வேலைக்கமர்த்தப்பட்ட ஏழைச் சிறுவனைப் பற்றியது.அச்சிறுவன் வீட்டுக்காரியல் ஏச்சுப் பேச்சுக்களால் துன்புறுத்தப் படும் போது,அவளின் மகள்,அந்த "எத்தின்"மீது கழிவிரக்கங்கொண்டு தாயைக் கண்டிக்கின்றாள்;உழைக்கும் வர்த்தகத்துக்கு உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த மனம் படித்தவளாய் விளங்குகிறாள்.உழைக்கும் வர்க்கத்தை உதாசீனப்படுத்தாமல்,ஒறுத்து நோக்காமல்,உயர்வை என்ன வேண்டும்;என்ற உயர்ந்த மனப்பாங்கை "சுகமாகிப் போன சுமை"என்ற கதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் மஸீதா புன்னியாமீன் .கதையில் வரும் கதாப்பாத்திரமான கபீர் மாஸ்டர்,தனது அந்திமகாலத்தில் தனக்குரிய வீடு வாசலை நாகூர் பிச்சை என்ற தனது அடிமைக்கு உரித்துடையதாய் உறுதி முடித்து வைக்கிறார்.அவரது மக்கள் தந்தையின் உயர்வான எண்ணத்தை மதித்து,அந்த வேலைக்காரனை உறவுக்காரனாய் அணைத்துக் கொள்கின்றார்கள்.இவ்வாறு,ஒவ்வொரு கதையும் ஒழுக்க மேம்பாட்டையும்,ஒப்ப செப்பமான உயர்ந்த வாழ்க்கைப் போக்கையுமே வலியுறுத்தி நிற்கின்றன.சிறந்த சிறுகதைத் தளத்திற்குச் சோடினை தேவை இல்லை;சுற்றி வளைத்துச் செல்லும் சாகசம் தேவையில்லை.சுவைஞனின் சுவைப்புலத்தைச் சுவீகரித்துக் கொள்ளும் சொல்லாட்சி மட்டும் இருந்தாற் போதும்.இந்த இலாவணியமும்,இரசனையும் இழையோடியணவாய் தோப்பில் மீரான்,சுஜாதா முதலானோரின் கதைகளில் அந்த அழகை நான் கண்டு மகிழ்கின்றேன்."கரும்புள்ளிகள்"என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கரு இதற்கு நிதர் சமனாகும்.மானிடத் தளம்பல்கள்,மனக்குழப்பங்கள்,மானிதப் பண்புகள் முதலானவற்றைக் கதாசிரியர்கள் கற்பனையில் படைக்கும் போது கையாளும் உத்தி முறைமை ஆளுக்காள் வேறுபடுவதை நாம் காணலாம்.கதாபாத்திரக் கூற்றாக வெளிப்படுவான இன்னும் சில.இந்த இருமுகத் தன்மையும் மஸீதா புன்னியாமீன்  கதைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.சோடை போகாத சுவைத் தன்மை இவரது கதைகளில் நிறைந்துள்ளன.அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
                                                                    இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

மலைச் சுவடுகள்

நூல்: மலைச் சுவடுகள்.
ஆசிரியர்:மாரிமுத்து சிவக்குமார்.
நூல் ஆய்வு:கலைமகள் ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின் இன்றைய தமிழ் இலக்கியப்  பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப் படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக... குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.

அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85 வரையிலான காலகட்டத்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும், இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ  வித்தியாசம். அன்று இலக்கியமே இலட்சியமாய்,இலட்சியமே  இலக்கியமாய் இருந்தது.

பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம்.வாசிப்புத்தன்மை எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது.சின்னத்திரைகளில் ,படங்களையும்,நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும் ,சஞ்சிகைகளும் இன்று எங்கே?
இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும் ,கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக்  குறைவாகவே காணப்படுகின்றன.வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால்  தோண்டப்படுகின்றனர்.நாமங்களைக் கொண்டு தரமானப் படைப்புக்கள் கூட சில தீய சக்திக ளினால் புதைக்கப்படுகின்றன.இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கலைஞர்களான வைரமுத்து ,மு.மேத்தா,அப்துல் ரஹ்மான் போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு  ஏன் இலங்கை கவிஞர்களது எம் தேசத்தில் கிடைப்பதில்லை ஏன் அவர்களுக்கு நேசக் கரம்  நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றிவிடக் கூடாது! அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து  விடக் கூடாது.இதை எம் மண்ணில் வாழும் கலை உள்ளங்கள் உணர வேண்டும்.சில தரமான கலை உள்ளங்களை இன்றைய சூழ்நிலைகளில் "சிந்தனை வட்டம் " இனம் கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு  நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு  நாம் சந்தோசப்படுவதுடன் உதவிக் கரங்களையும்  நீட்ட வேண்டும்.இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் "சிந்தனை வட்டம்"மலையக மண்ணில் பிறந்த மாரிமுத்து சிவக்குமாரின்  மலையகச் சுவடுகள் எனும் கவி நூல் சிந்தனை வட்டத்தின் 204 வது  வெளியீடாக மாரிமுத்து சிவக்குமாரின் முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது.ஆம் மலையக கலை இலக்கிய படைபாளர்களின்  வரிசையில்  அமரர்கள் ,க. ப.லிங்கதாசன் ,குறிஞ்சி தென்னவன்,மற்றும் ஹலிம்தீன் ,பண்ணாமத்து  கவிராயர் போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்கள்.அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவக்குமாரை சேர்க்கலாம்.ஆம் மாரிமுத்து சிவக்குமாரின் கவிதைகளில் சமூக நோக்கும்,இன,மொழி,மத,பேத மற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும் ,சஞ்சிகைகளிலும் ,மலர்களிலும் வெளிவந்த கவிதைகள்  பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன.எமது நாட்டிலும் ,அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத்  தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன.சிவக்குமாரின் கவிதைகளில் முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது.சமூக அவலங்களையும் ,மூடநம்பிக்கைகளையும்  ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப்  போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.கவிஞர் தாம் வாழும்,தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார்.மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார்.மலையகம்  எதிர் காலத்தில் புதுமைகளை ,மாற்றங்களைக் காண வேண்டும்.என்ற தமது  தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.மலையகத்
தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலை பெற்று வந்த போர்,எண்ணிறைந்த உடல் அழிவுகளையும்,உடமை  அழிவுகளையும்,உள அழிவுகளையும், ஏற்படுத்தியது.இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிட வில்லை.என்றைக்கும் 'போர் வேண்டாம்' என்று  தான் மனிதாபிமான  இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன.கவிஞனின் வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.' யுத்தத்தைப் புதைப்போம் ' என்ற கவிதையில்  தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார். கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக் கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள் , மலையகத்து அவலங்கள் பற்றியவையே! மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும் ,தம்மால் ஈர்க்கத்தக்க  அளவிற்குத் துன்பக்  கேணிகளாகவும்  ,அவலங்கள்,சோகங்கள்,சோதனைகள்,வேதனைகள்  முதலியவற்றின்  மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்.
                                                       லயத்துச் சிறைகள் கவிதையில்,
                                                       சிறைகளில் வாழும்
                                                       கைதிகளைப் போல்,
                                                       எங்கள் வாழ்க்கையின்
                                                       உரிமைகளை எல்லாம் -இந்த
                                                       லயச்சிறைக்குள்ளேயே வைத்து
                                                       கவ்வாத்து வெட்டுகின்றனர் !   
     
மனத்துயரம் கவிதையில்  தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்குச் சிலவற்றை காணலாம்.         
                                                        மலைச்சுவடுகளும் கவிதையில்
                                                        உழைப்பின் ஏணிகள்தான்

                                                        எங்களது
                                                        கருவறைகள்
                                                        அந்த ஏணியே
                                                         ஊனமாகும் போது
                                                         எங்கள் உருவங்கள்.
                                                         எப்படி முழுமை பெறும்....?

                                                  
                                                         இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ....?
                                                         எனும் இன்னொரு கவிதையில்,
                                                         வாழ்வதுவோ
                                                         ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
                                                         சாய்வதற்கோ இடமில்லை.
                                                         லயத்துக்குள்ளே....
                                                         வீழும்வரை விதியின்பாதையிலே
                                                         நடந்து செல்ல
                                                         மிரட்டி மிரட்டி
                                                         ஓரங்கட்டபலபேர்.


இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதைகள் துயரத்தை தருகின்றன.
முடிவாக;
                     
ஆழமான ,சமூக பார்வை மிக்க,முழு மனிதயினத்தை  யோசிக்கத் தூண்டும் கருத்துக்களை இவரது அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன். "மலைச் சுவடுகள்" என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன். கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கலையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகிறேன்.